Wednesday, July 28, 2010

~: கடவுள் வாழ்த்து :~


தேனாய் தீம்பழமாய் சுவைசேர் கரும்பாய் அமுதந்
தானாய் அன்பருளே இனிக்கின்ற தனிப்பொருளே
வானாய்க் கால்அனலாய் புனலாய்அதில் வாழ்புவியாய்
ஆனாய் தந்தனையே அருள்ஆர் அமுதந் தனையே!


உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்களா
அளவி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவ ரன்ன வர்க்கேசர ணாங்களே!

இயற்கையின் உயிராய் எங்கும்
    எழுந்தருள் இறையே போற்றி!
செயற்கையின் சிந்தைக் கெட்டாச்
    செல்வமே போற்றி போற்றி!
முயற்சியின் விளைவால் ஓங்கும்
    முதன்மையே போற்றி போற்றி!
பயிற்சியில் நிர்ப்போர்க் கென்றும்
    பண்புசெய் பரனே போற்றி!!


எண்ணிய முடிதல் வேண்டும்
    நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
    தெளிந்தநல் லறிவு வேண்டும்
பண்ணிய பாவ மெல்லாம்
    பரிதிமுன் பணியே போல
நண்ணிய நின்முன் னிங்கு
    நசித்திடல் வேண்டும் அன்னாய்!!


விண்ணுறு சுடரே என்னுள்
    விளங்கிய விளக்கே போற்றி!
கண்ணுறு மணியே என்னைக்
    கலந்தநற்க் களிப்பே போற்றி!
பண்ணுறு பயனே என்னைப்
    பணிவித்த மணியே போற்றி!
எண்ணறும் அடியார் தங்கட்க்
    கினியதெல் லமுதே போற்றி!!நமசிவாய வாழ்க!!

Friday, July 23, 2010

திரு அண்ணாமலை - உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்


திரு அண்ணாமலை

(திருஞானசம்பந்த சுவாமிகள் )
பண் - நட்டபாடை
உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே. 1.10.1

தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித்
தூமாமழை துறுவன்மிசை சிறுநுண்துளி சிதற
ஆமாம்பிணை யணையும்பொழில் அண்ணாமலை யண்ணல்
பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினை யிலரே. 1.10.2

பீலிம்மயில் பெடையோடுறை பொழில்சூழ் கழைமுத்தஞ்
சூலிம்மணி தரைமேல்நிறை சொரியும்விரி சாரல்
ஆலிம்மழை தவழும்பொழில் அண்ணாமலை அண்ணல்
காலன்வலி தொலைசேவடி தொழுவாரன புகழே. 1.10.3

உதிரும்மயி ரிடுவெண்டலை கலனாவுல கெல்லாம்
எதிரும்பலி யுணலாகவும் எருதேறுவ தல்லால்
முதிருஞ்சடை இளவெண்பிறை முடிமேல்கொள அடிமேல்
அதிருங்கழல் அடிகட்கிடம் அண்ணாமலை யதுவே. 1.10.4

மரவஞ்சிலை தரளம்மிகு மணியுந்துவெள் ளருவி
அரவஞ்செய முரவம்படும் அண்ணாமலை யண்ணல்
உரவஞ்சடை யுலவும்புனல் உடனாவதும் ஓரார்
குரவங்கமழ் நறுமென்குழல் உமைபுல்குதல் குணமே. 1.10.5

பெருகும்புனல் அண்ணாமலை பிறைசேர்கடல் நஞ்சைப்
பருகுந்தனை துணிவார்பொடி அணிவாரது பருகிக்
கருகும்மிட றுடையார்கமழ் சடையார்கழல் பரவி
உருகும்மனம் உடையார்தமக் குறுநோயடை யாவே. 1.10.6

கரிகாலன குடர்கொள்வன கழுகாடிய காட்டில்
நரியாடிய நகுவெண்டலை யுதையுண்டவை யுருள
எரியாடிய இறைவர்க்கிடம் இனவண்டிசை முரல
அரியாடிய கண்ணாளொடும் அண்ணாமலை யதுவே. 1.10.7

ஒளிறூபுலி அதளாடையன் உமையஞ்சுதல் பொருட்டால்
பிளிறூகுரல் மதவாரணம் வதனம்பிடித் துரித்து
வெளிறூபட விளையாடிய விகிர்தன்னிரா வணனை
அளறூபட அடர்த்தானிடம் அண்ணாமலை யதுவே. 1.10.8

விளவார்கனி படநூறிய கடல்வண்ணனும் வேதக்
கிளர்தாமரை மலர்மேலுறை கேடில்புக ழோனும்
அளவாவணம் அழலாகிய அண்ணாமலை யண்ணல்
தளராமுலை முறுவல்உமை தலைவன்னடி சரணே. 1.10.9

வேர்வந்துற மாசூர்தர வெயில்நின்றுழல் வாரும்
மார்வம்புதை மலிசீவர மறையாவரு வாரும்
ஆரம்பர்தம் உரைகொள்ளன்மின் அண்ணாமலை யண்ணல்
கூர்வெண்மழுப் படையான்நல கழல்சேர்வது குணமே. 1.10.10

வெம்புந்திய கதிரோனொளி விலகும்விரி சாரல்
அம்புந்திமூ வெயிலெய்தவன் அண்ணாமலை யதனைக்
கொம்புந்துவ குயிலாலுவ குளிர்காழியுள் ஞான
சம்பந்தன தமிழ்வல்லவர் அடிபேணுதல் தவமே. 1.10.11


இது நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அருணாசலேசுவரர்,
தேவியார் - உண்ணாமுலையம்மை


நன்றி : http://www.thamilworld.com/forum/lofiversion/index.php?t14755.html

Tuesday, July 13, 2010

தீன கருணாகரனே நடராஜா.. நீலகண்டனே

ஓம் சிவாய நம


படம்.திருநீலகண்டர்
வருடம்.1939
பாடல்.பாபநாசம் சிவன்

பல்லவி.

(; தீன கருணாகரனே நடராஜா..........................நீலகண்டனே!) 2 ஜி

அனுபல்லவி.

(நின்னருள் புகழ்ந்து பணியும்
என்னையும் இரங்கி யருளும்) 2 ஜி
(மௌன குருவே ஹரனே எனையாண்ட நீலகண்டனே) 2 ஜி
; தீன கருணாகரனே நடராஜா...............நீலகண்டனே

சரணம் 1.

(மீன லோச்சனி மணாளா
தாண்டவமாடும் சபாபதே) 2 ஜி
(ஞானிகள் மனம் விரும்பும் நீலகண்டனே) 2 ஜி
மௌன குருவே, மௌன குருவே, மௌன குருவே,
மௌன குருவே.........ஹரனே
எனையாண்ட நீலகண்டனே
; தீன கருணாகரனே நடராஜா...........நீலகண்டனே

சரணம் 2.

ஆதியந்தம் இல்லா ஹரனே.......ஆ...........
............ஆ.............ஆ............
(ஆதியந்தம் இல்லா ஹரனே
அன்பருள்ளம் வாழும் பரனே) 2 ஜி
(பாதி வேனியனே பரமேஸா நீலகண்டனே) 2 ஜி
; தீன கருணாகரனே நடராஜா..........நீலகண்டனே..........

2 ஜி - இரு முறை பாடவும்.
3 ஜி - மூன்று முறை பாடவும்

Thursday, July 8, 2010

திருவாசகம்-கீர்த்தித் திருவகவல்

திருவாசகம்-கீர்த்தித் திருவகவல்
(மாணிக்க வாசகம்)


தில்லை மூதூர் ஆடிய திருவடி
பல்லுயி ரெல்லாம் பயின்றன னாகி
எண்ணில் பல்குணம் எழில்பெற விளங்கி
மண்ணும் விண்ணும் வானோ ருலகுந்
துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும் 
என்னுடை யிருளை ஏறத் துரந்தும்
அடியா ருள்ளத் தன்புமீ தூரக்
குடியாக் கொண்ட கொள்கையும் சிறப்பும்
மன்னு மாமலை மகேந்திர மதனிற்
சொன்ன ஆகமந் தோற்றுவித் தருளியுங
கல்லா டத்துக் கலந்தினி தருளி
நல்லா ளோடு நயப்புற வெய்தியும்
பஞ்சப் பள்ளியிற் பான்மொழி தன்னொடும்
எஞ்சா தீண்டும் இன்னருள் விளைத்தும்
கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள்
விராவு கொங்கை நற்றடம் படிந்தும்
கேவேட ராகிக் கெளிறது படுத்து
மாவேட் டாகிய ஆகமம் வாங்கியும்
மற்றவை தம்மை மகேந்தி ரத்திருந்
துற்றஐம் முகங்க ளாற்பணித் தருளியும்
நந்தம் பாடியில் நான்மறை யோனாய்
அந்தமில் ஆரிய னாயமர்ந் தருளியும்
வேறுவே றுருவும் வேறுவே றியற்கையும்
நூறுநூ றாயிரம் இயல்பின தாகி
ஏறுடை ஈசன்இப் புவனியை உய்யக
கூறுடை மங்கையும் தானும்வந் தருளிக்
குதிரையைக் கொண்டு குடநா டதன்மிசைச்
சதுர்படச் சாத்தாய்த் தானெழுந் தருளியும்
வேலம் புத்தூர் விட்டே றருளிக்
கோலம் பொலிவு காட்டிய கொள்கையும்
தற்பண மதனிற் சாந்தம் புத்தூர்
விற்பொரு வேடற் கீந்த விளைவும்
மொக்கணி யருளிய முழுத்தழல் மேனி
சொக்க தாகக் காட்டிய தொன்மையும்
அரியொடு பிரமற் களவறி யொண்ணான் 
நரியைக் குதிரை யாக்கிய நன்மையும்
ஆண்டுகொண் டருள அழகுறு திருவடி
பாண்டி யன்தனக் குப்பரி மாவிற்
றீண்டு கனகம் இசையப் பெறாஅ
தாண்டான் எங்கோன் அருள்வழி யிருப்பத் 
தூண்டு சோதி தோற்றிய தொன்மையும்
அந்தண னாகி ஆண்டுகொண் டருளி
இந்திர ஞாலங் காட்டிய இயல்பும்
மதுரைப் பெருநன் மாநக ரிருந்து
குதிரைச் சேவக னாகிய கொள்கையும் 
ஆங்கது தன்னில் அடியவட் காகப்
பாங்காய் மண்சுமந் தருளிய பரிசும்
உத்தர கோச மங்கையு ளிருந்து
வித்தக வேடங் காட்டிய இயல்பும்
பூவண மதனிற் பொலிந்திருந் தருளித் 
தூவண மேனி காட்டிய தொன்மையும்
வாத வூரினில் வந்தினி தருளிப்
பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும்
திருவார் பெருந்துறைச் செல்வ னாகிக்
கருவார் சோதியிற் கரந்த கள்ளமும் 
பூவல மதனிற் பொலிந்தினி தருளிப்
பாவ நாச மாக்கிய பரிசும்
தண்ணீர்ப் பந்தர் சயம்பெற வைத்து
நன்னீர்ச் சேவக னாகிய நன்மையும்
விருந்தின னாகி வெண்கா டதனில் 
குருந்தின் கீழன் றிருந்த கொள்கையும்
பட்ட மங்கையிற் பாங்கா யிருந்தங்
கட்டமா சித்தி அருளிய அதுவும்
வேடுவ னாகி வேண்டுருக் கொண்டு
காடது தன்னிற் கரந்த கள்ளமும் 
மெய்க்காட் டிட்டு வேண்டுருக் கொண்டு
தக்கா னொருவ னாகிய தன்மையும்
ஓரி யூரின் உகந்தினி தருளிப்
பாரிரும் பாலக னாகிய பரிசும்
பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்துந் 
தேவூர் தென்பால் திகழ்தரு தீவிற்
கோவார் கோலங் கொண்ட கொள்கையும்
தேனமர் சோலைத் திருவா ரூரில்
ஞானந் தன்னை நல்கிய நன்மையும்
இடைமரு ததனில் ஈண்ட இருந்து 
படிமப் பாதம் வைத்தஅப் பரிசும்
ஏகம் பத்தின் இயல்பா யிருந்து
பாகம் பெண்ணோ டாயின பரிசும்
திருவாஞ் சியத்திற் சீர்பெற இருந்து
மருவார் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும் 
சேவக னாகித் திண்சிலை யேந்திப்
பாவகம் பலபல காட்டிய பரிசும்
கடம்பூர் தன்னில் இடம்பெற இருந்தும்
ஈங்கோய் மலையில் எழிலது காட்டியும்
ஐயா றதனிற் சைவ னாகியும் 
துருத்தி தன்னில் அருத்தியோ டிருந்தும்
திருப்பனை யூரில் விருப்ப னாகியும்
கழுமல மதனிற் காட்சி கொடுத்தும்
கழுக்குன் றதனில் வழுக்கா திருந்தும்
புறம்பய மதனில் அறம்பல அருளியும் 
குற்றா லத்துக் குறியா யிருந்தும்
அந்தமில் பெருமை அழலுருக் கரந்து
சுந்தர வேடத் தொருமுத லுருவுகொண்
டிந்திர ஞாலம் போலவந் தருளி
எவ்வெவர் தன்மையுந் தன்வயிற் படுத்துத்
தானே யாகிய தயாபரன் எம்மிறை
சந்திர தீபத்துச் சாத்திர னாகி
அந்தரத் திழிந்துவந் தழகமர் பாலையுட்
சுந்தரத் தன்மையொடு துதைந்திருந் தருளியும்
மந்திர மாமலை மகேந்திர வெற்பன் 
அந்தமில் பெருமை அருளுடை அண்ணல்
எந்தமை ஆண்ட பரிசது பகரின்
ஆற்றல் அதுவுடை அழகமர் திருவுரு
நீற்றுக் கோடி நிமிர்ந்து காட்டியும்
ஊனந் தன்னை யொருங்குடன் அறுக்கும் 
ஆனந் தம்மே ஆறா அருளியும்
மாதிற் கூறுடை மாப்பெருங் கருணையன்
நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும்
அழுக்கடை யாமல் ஆண்டுகொண் டருள்பவன்
கழுக்கடை தன்னைக் கைக்கொண் டருளியும் 
மூல மாகிய மும்மலம் அறுக்குந்
தூய மேனிச் சுடர்விடு சோதி
காதல னாகிக் கழுநீர் மாலை
ஏலுடைத் தாக எழில்பெற அணிந்தும்
அரியொடு பிரமற் களவறி யாதவன் 
பரிமா வின்மிசைப் பயின்ற வண்ணமும்
மீண்டு வாரா வழியருள் புரிபவன்
பாண்டி நாடே பழம்பதி யாகவும்
பத்திசெய் அடியரைப் பரம்பரத் துய்ப்பவன்
உத்தர கோச மங்கையூ ராகவும் 
ஆதி மூர்த்திகட் கருள்புரிந் தருளிய
தேவ தேவன் திருப்பெய ராகவும்
இருள்கடிந் தருளிய இன்ப வூர்தி
அருளிய பெருமை அருண்மலை யாகவும்
எப்பெருந் தன்மையும் எவ்வெவர் திறமும் 
அப்பரி சதனால் ஆண்டுகொண் டருளி
நாயி னேனை நலமலி தில்லையுட்
கோல மார்தரு பொதுவினில் வருகென
ஏல என்னை யீங்கொழித் தருளி
அன்றுடன் சென்ற அருள்பெறும் அடியவர் 
ஒன்ற வொன்ற உடன்கலந் தருளியும்
எய்தவந் திலாதார் எரியிற் பாயவும்
மாலது வாகி மயக்க மெய்தியும்
பூதல மதனிற் புரண்டுவீழ்ந் தலறியும்
கால்விசைத் தோடிக் கடல்புக மண்டி 
நாத நாத என்றழு தரற்றிப்
பாத மெய்தினர் பாத மெய்தவும்
பதஞ்சலிக் கருளிய பரமநா டகஎன்
றிதஞ்சலிப் பெய்தநின் றேங்கினர் ஏங்கவும்
எழில்பெறும் இமயத் தியல்புடை யம்பொற் 
பொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடநவில்
கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்
கருளிய திருமுகத் தழகுறு சிறுநகை
இறைவன் ஈண்டிய அடியவ ரோடும்
பொலிதரு புலியூர்ப் புக்கினி தருளினன் 
ஒலிதரு கைலை உயர்கிழ வோனே.

பொழிப்புரை :

தில்லையாகிய பழைய நகரில் நிருத்தம் செய்தருளிய திருவடிகளால், பல உயிர்களில் எல்லாம் தங்கிப் பல அருட் செயல்களைச் செய்தவனாகி, அளவில்லாத பல குணங்களோடு அழகு பெற விளங்கி மண்ணுலகிலும், விண்ணுலகிலும் மற்றைய தேவருலகிலும் பொருந்திய கல்வியைத் தோற்றுவித்தும், நீக்கியும், என்னுடைய அஞ்ஞான இருளை முழுதும் ஒழித்தும் அடியாருடைய உள்ளத்தில் அன்பானது பெருக, அதனைக் குடியிருப்பாகக் கொண்ட அருளும் தலைமையும் உடையவனாய், மேலுலகத்தில் தான் சொல்லிய ஆகமத்தை நிலைபெற்ற மகேந்திர மலையின்கண் வீற்றிருந்து நிலவுலகத்திற்கு வெளிப்படுத்தியும், கல்லாடம் என்னும் திருப்பதியில் இனிதாக உமாதேவியோடு, யாவரும் விரும்பும்படி ஒருமித்து எழுந்தருளியிருந்தும், பஞ்சப் பள்ளியென்னும் திருப் பதியில் பால் போன்ற மொழியையுடையவளாகிய உமாதேவி யோடும், குறையாமல் மிகும் இனிய அருள் செய்தும், வேடவுருவத் துடன் முருக்கம்பூப் போன்ற உதட்டையுடைய உமாதேவியின் நெருங்கின அழகான தனங்களாகிய குளத்தில் மூழ்கியும், வலைய ராகிக் கெளிற்று மீனைப் பிடித்து, பெருமை வாய்ந்த விருப்பத்தினை யுடைய ஆகமங்களை அக்கெளிற்றினிடமிருந்து கவர்ந்தும், அவ் வாகமங்களை மகேந்திரமலையில் இருந்து பொருந்திய ஐந்து திரு முகங்களாலும் உபதேசித்தருளியும், நந்தம்பாடி என்னும் திருப் பதியில் வேதியனாய், முடிவற்ற ஆசிரியனாய் எழுந்தருளியும், வெவ் வேறு திருவுருவங்களும் வெவ்வேறு குணங்களும், நூறு இலட்சம் வகையினையுடையனவாகி இடப வாகனத்தையுடைய சிவபெருமான், இவ்வுலகத்தை உய்விக்கும் பொருட்டு, தனது இடப் பாகத்தையுடைய உமாதேவியும் தானுமாய் எழுந்தருளி மேல் நாட்டுக் குதிரைகளைக் கொண்டு, அழகு பொருந்த வாணிகக் கூட்டமாய் தானே எழுந்தருளி வந்தும், வேலம்புத்தூர் என்னும் திருப்பதியில் வேற்படையைக் கொடுத்தருளித் தன் திருக்கோலத்தைச் சிறப்பாகக் காணுமாறு செய்த கோட்பாடும், சாந்தம்புத்தூரில் வில்லினால் போர் செய்கின்ற ஒரு வேடனுக்குக் கண்ணாடியில் வாட்படை முதலியவற்றைக் கொடுத்த பயனும், ஓர் அன்பர்க்கு அருளுதற் பொருட்டுக் குதிரைக்குக் கொள்ளுக்கட்டும் தோற்பையில், மிக்க நெருப்புத் தோன்றத் தனது உருவத்தை அழகாகக் காட்டிய பழைமையும், திருமாலுக்கும் பிரமனுக் கும் அளவு அறியப்படாதவனாகிய சிவபெருமான், நரியைக் குதிரை களாகச் செய்த நன்மையும், பாண்டியனை ஆட்கொண்டருள, அப் பாண்டியனுக்குக் குதிரையை விற்று, அதற்கு அவன் கொடுத்த மிக்க பொன்னைப் பெறக் கருதாது, என்னை ஆண்டவனாகிய எம் இறைவனது அருள் வழியையே நான் நாடியிருக்குமாறு அழகு பொருந்திய பாதங்களை, மிக்க ஒளியுடன் காட்டியருளிய பழைமையும், வேதியனாகி, அடியேனை ஆட்கொண்டருளி மாயம் செய்து மறைந்த தன்மையும்; மதுரையாகிய பெரிய நல்ல பெருமை வாய்ந்த நகரத்திலிருந்து, குதிரை வீரனாய் வந்த கோட்பாடும், அந்த மதுரை நகரத்தில் அடியவளாகிய வந்தி என்பவள் பொருட்டு, மற்றவர்களுடன் மண் சுமந்தருளிய விதமும், திருவுத்தரகோச மங்கையிலிருந்து வித்தக வேடம் காட்டிய இயற்கையும், திருப்பூவணத்தில் விளங்கியிருந்தருளி, தூய்மையான அழகிய திருமேனியைப் பொன்னனையாள் என்பவளுக்குக் காட்டிய பழைமையும், திருவாதவூரில் எழுந்தருளி இனிய திருவருள் புரிந்து பாதச் சிலம்பு ஓசையைக் காட்டிய செயலும், அழகு நிறைந்த பெருந்துறைக்கு இறைவனாகி, மேன்மை பொருந்திய ஒளியில் மறைந்த வஞ்சகமும், திருப்பூவணத்தில் இனிதாக விளங்கியருளிப் பாவத்தை அழித்த விதமும், தண்ணீர்ப் பந்தலை வெற்றியுண்டாக வைத்து நல்ல நீரைத் தரும் ஆளாகியிருந்த நன்மையும், விருந்தாளியாகி, திருவெண்காட்டில் குருந்த மரத்தின் அடியில் அன்று வீற்றிருந்த கோலமும், திருப்பட்ட மங்கை என்னும் திருப்பதியில் சிறப்பாய் இருந்து அவ்விடத்தில் அட்டமா சித்திகளை அருளிய விதமும், வேடுவனாய் வந்து வேண்டும் வடிவைக் கொண்டு காட்டில் ஒளித்த வஞ்சகமும், படைகளின் உண்மையைக் காட்டச் செய்து, அதற்கு வேண்டிய வடிவம் கொண்டு மேன்மையுடைய ஒருவனாய்த் தோன்றிய தன்மையும், ஓரியூரில், இனிதாக எழுந்தருளி, பூமியில் பிறவாப் பெருமையுடைய குழந்தையாகிய தன்மையும், பாண்டூரில் மிக இருந்தும், தேவூருக்குத் தென்திசையில் விளங்குகின்ற தீவில் அரசக் கோலம் கொண்ட கோட்பாடும், தேன் பொருந்திய மலர்ச் சோலை சூழ்ந்த திருவாரூரில் ஞானத்தைக் கொடுத்த நன்மையும், திருவிடைமருதூரில் மிக இருந்து பரிசுத்தமான திருவடியை வைத்த அந்தத் தன்மையும், திருவேகம்பத்தில் இயற்கையாய் எழுந்தருளி யிருந்து பெண்ணை இடப்பாகத்தில் கொண்ட தன்மையும், திரு வாஞ்சியம் என்னும் தலத்தில் சிறப்புப் பொருந்த எழுந்தருளி மணம் நிறைந்த கூந்தலையுடைய உமாதேவியோடு மகிழ்ந்திருந்த விதமும்;
வீரனாகி, வலிய வில்லைத் தாங்கி, பலப்பல வீரச் செயல் களைக் காட்டிய தன்மையும், திருக்கடம்பூரில் இடமுண்டாக இருந் தும், திருவீங்கோய் மலையில் அழகைக் காட்டியும், திருவையாற்றில் சைவனாய் வந்தும், திருத்துருத்தி என்னும் திருப்பதியில் விருப்பத் தோடிருந்தும், திருப்பனையூர் என்னும் பதியில் விருப்பமுடைய வனாய் இருந்தும், சீகாழியில் திருவுருவினைக் காட்டியும், திருக்கழுக் குன்றத்தில் நீங்காது இருந்தும், திருப்புறம்பயத்தில் பல அறச்செயல் களை அருளிச் செய்தும், திருக்குற்றாலத்தில் அடையாளமாய் இருந்தும், முடிவில்லாத பெருமையையுடைய, நெருப்புப் போலும் உருவத்தை மறைத்து, அழகிய கோலத்தினையுடைய ஒப்பற்ற முதற் பொருளின் உருவம் கொண்டு இந்திர ஞாலம் போல எழுந்தருளி, எல்லாருடைய குணங்களும் தன்னிடத்து அடக்கித்தானொருவனே முதல்வனாய் நிற்கிற அருளினால் மேம்பட்ட எம் தலைவன் சந்திரதீபம் என்னும் தலத்தில் சாத்திரப் பொருளை உபதேசிப் பவனாய், ஆகாயத்தினின்றும் இறங்கி வந்து அழகு வாய்ந்த திருக் கழிப்பாலை என்னும் தலத்தில் அழகிய திருக்கோலத்தோடு பொருந்தி யிருந்தருளியும்;
மறைமொழிகள் வெளிப்படுவதற்கு இடமான பெரிய மலையாகிய, மகேந்திர மலையையுடையவன் முடிவற்ற பெருமையையும் அருளையும் உடைய பெரியோன், எம்மை ஆண்டருளிய தன்மையைச் சொல்லின், வலிமையையுடைய அழகமைந்த திரு மேனியில், திருவெண்ணீற்றுக் கொடியை உயர்த்திக் காட்டியும், பிறவித் துன்பத்தை ஒருங்கே அழிக்கும் இன்பமே ஆறாகத் தந்தருளியும், உமாதேவியின் பாகத்தையுடைய, மிகவும் பெருங் கருணையையுடையவன், நாதமாகிய பெரிய பறை முழங்கி ஒலிக்கக் கண்டும், அன்பர் மனம் களங்கமடையாமல் ஆட்கொண்டருள்வோன் முத்தலை வேலினைக் கைப்பிடித்தருளியும், மூலகாரணமாகிய மும் மலம் நீக்குகிற பரிசுத்தமாகிய திருமேனியில் ஒளிவீசுகின்ற சோதியாய் உள்ளவன், அன்பரிடத்து அன்புடையவனாகிச் செங்கழுநீர் மலர் மாலையைப் பொருத்தமுடையதாக அழகுபெறத் தரித்தும், திருமாலுக்கும் பிரமனுக்கும் எல்லையறியப் படாதவன் குதிரையின் மீது ஏறி வந்த விதமும், மீண்டும் பிறவிக்கு வாராத முத்தி நெறியை அன்பர்க்குக் கொடுப்பவன், பாண்டி வளநாடே பழைய இடமாகக் கொண்டும், அன்பு செய்கின்ற அடியவரை மிகவும் மேலான முத்தியுலகத்தில் சேர்ப்பவன், திருவுத்தரகோச மங்கையைத் திருப்பதியாகக் கொண்டும், முதன்மையான மும்மூர்த்திகட்குத் திருவருள் செய்த மகாதேவன் என்பதே திருப்பெயராகக் கொண்டும், அடியார்கட்கு அஞ்ஞான இருளை நீக்கியதனால் ஆகிய பேரின்பமாகிய ஊர்தியைக் கொடுத்தருளிய பெருமையை உடைய அருளே மலையாகக் கொண்டும், எப்படிப்பட்ட பெருந் தன்மையையும் எவ்வகைப் பட்டவர் திறத்தினையும் அவ்வத் தன்மைகளால் ஆட்கொண்டருளி, நாய் போன்ற என்னை நன்மை மிகுந்த தில்லையுள் அழகு நிறைந்த `அம்பலத்தில் வருக` என்று சொல்லி, பொருந்த அடியேனை இவ்வுலத்திலே நிறுத்தி, அன்று தன்னோடு கூடப்போன அருள்பெற்ற அடியார், தன்னோடு பொருந்த அவரோடு தான் கலந்து மறைந்தருளியும், தன்னைக் கலக்க வாராதவர்களுள் சிலர், தீயில் குதிக்கவும், ஆசை கொண்டு மயக்கம் அடைந்தும், பூமியில் புரண்டு வீழ்ந்து அலறியும், நிற்க, காலால் வேகம் கொண்டு ஓடிக் கடலில் விழ நெருங்கி, `நாதனே! நாதனே!` என்று அழுது புலம்பி, திருவடியை அடைந்தவர்கள் முத்திப்பேறு எய்தவும், பதஞ்சலி முனிவர்க்கு அருள் செய்த மேலான கூத்தனே என்று இதயம் வருந்த நின்று ஏங்கினவர் ஏங்கி நிற்கவும், ஒலிக்கின்ற கயிலாய மலையின் சிறந்த தலைவன் அழகு பெற்ற இமய மலையின் தன்மை வாய்ந்த அழகிய பொன்னினால் செய்யப்பட்டு விளங்குகின்ற தில்லையம்பலத்தினில் நடனம் செய்த, கொவ்வைக் கனி போன்ற சிவந்த வாயினையுடைய உமாதேவியோடு காளிக்கும் அருள் செய்த, திருக்கூத்தில், அழகு மிக்க புன்னகையையுடைய எம்பெருமான் தன் திருவடியைச் சரணாக அடைந்த தொண்டர்களுடனே விளங்குகின்ற புலியூரில் எழுந்தருளி இனிதாக எனக்கு அருள் செய்தனன்.

நன்றி : http://www.thevaaram.org

விருப்பம் :)