Friday, August 6, 2010

அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம்

திருவருட்பா 
(திருவருட்ப்ரகாச வள்ளலார்)





1)
அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம் 
  அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம் 
பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம் 
  போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம் 
இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளும் தெய்வம் 
  எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளும் தெய்வம் 
தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம் 
  சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம். 

2)
தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம் 
  தன்னைநிகர் இல்லாத தனித்தலைமைத் தெய்வம் 
வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம் 
  மலரடிஎன் சென்னிமிசை வைத்தபெருந் தெய்வம் 
காயாது கனியாகிக் கலந்தினிக்குந் தெய்வம் 
  கருணைநிதித் தெய்வம்முற்றுங் காட்டுவிக்குந் தெய்வம் 
சேயாக எனைவளர்க்குந் தெய்வமகா தெய்வம் 
  சிற்சபையில் ஆடுகின்ற தெய்வமதே தெய்வம். 


ஜெயஸ்ரீ said...இந்தப் பாடல்களுக்கு சுருக்கமாக விளக்கமளிக்க முயல்கிறேன்

1. இறைவனை ஜோதி(ஒளி) வடிவாகக் கண்ட வள்ளலார் "அருபெருஞ்சோதி" என்றே அழைத்தார்.
அந்த அருட்பெருஞ்சோதி தெய்வம் எனைத் தடுத்தாட்கொண்ட தெய்வம். பொன்னம்பலமாகிய சிதம்பரத்தே ஆனந்தக்கூத்தாடும் தெய்வம். நான்மறைகளும் போற்றும் தெய்வம். தத்துவஞானத்தையும், காரண காரியங்களையும் கடந்த தெய்வம். ( சைவ சித்தாந்தப்படி போதாந்த நிலை என்பது ஞானத்தயும்கடந்த நிலை. நாதாந்த நிலை என்பது காரிய காரணங்களைக் கடந்த நிலை. நாதாந்த நிலை அடைந்த ஒருவன் சிவலோகத்தைத் தன்னுள்ளே காண்கிறான்)
என் மன இருளகற்றி உள்ளொளி பெருக்கிய தெய்வம். நான் வேண்டியவற்றை வேண்டியவாறே எனக்கு அருளிய தெய்வம் . (அடிகளார் வேண்டியதுதான் என்ன - அவனருளன்றி வேறொன்றுமில்லை - அவனருளாலே அவன் தாள் வணங்கி). ஏன்னுடய எளியபாடல்களுக்கும் இரங்கி என்னையும் சிவமாக்கிய தெய்வம் (அடிகளார் பரசிவ நிலை எய்தி விட்டார். எனவே என்னையும் சிவமாக்கி - அ கம் ப்ரம்மாஸ்மி). பொன்னம்பலத்தே ஆனந்த நடமிடும் தெய்வம்.. 

2. தாயாய்த் தந்தையாய் எனைத்தாங்கும் தெய்வம் (அம்மையே அப்பா ஒப்பிலா மணியே). தனக்கு நிகர் இல்லாத தெய்வம்( தனக்குவமை இல்லாதான் ). தன்னை வாயாரத் துதிப்பவர் உள்ளக்கோயிலிலே வீற்றிருக்கும் தெய்வம். தன் திருவடிகளை என் தலையில் வைத்து எனக்கருள் மழை பொழிந்த தெய்வம்.கருணைக்கடலான தெய்வம்.பேரானந்தப் பெரு நிலையை எனக்கு முற்றும் காட்டிய தெய்வம். என்னை சேயாக்கி பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்தூட்டும் தெய்வம்.. சிற்சபையில் நடமிடும் தெய்வம்

எனக்குத் தெரிந்தவரை விளக்கம் தந்திருக்கிறேன்.


நன்றி: http://podhuppaattu.blogspot.com/2006/02/10_06.html

விருப்பம் :)