Sunday, December 23, 2012

நம்பி என்ற திருப்பதிகம்

நம்பி என்ற திருப்பதிகம்

(சுந்தரர் தேவாரம் : ஏழாம் திருமுறை)
063 பொது

பாடல் எண் : 1
மெய்யைமுற் றப்பொடிப் பூசியொர் நம்பி
வேதம்நான் கும்விரித் தோதியொர் நம்பி
கையில்ஓர் வெண்மழு வேந்தியொர் நம்பி
கண்ணும் மூன்றுடை யானொரு நம்பி
செய்யநம் பிசிறு செஞ்சடை நம்பி
திரிபுரந் தீயெழச் செற்றதோர் வில்லால்
எய்தநம் பியென்னை ஆளுடை நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே

பொழிப்புரை :
திருமேனி முழுதும் திருநீற்றைப் பூசியுள்ள ஒப்பற்ற நம்பியே , வேதங்கள் நான்கையும் விரித்துப் பாடிய ஒப்பற்ற நம்பியே , கையில் ஒரு வெள்ளிய மழுவை ஏந்திய ஒப்பற்ற நம்பியே , கண்கள் மூன்றை உடையவனாகிய நம்பியே , செம்மை நிறம் உடைய நம்பியே , புல்லிய , சிவந்த சடையை யுடைய நம்பியே , முப்புரங்களை , நெருப்பு எழுமாறு , வளைக்கப்பட்டதொரு வில்லால் எய்த நம்பியே , என்னை ஆளாக உடைய நம்பியே , நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன் .


குறிப்புரை :

` நம்பி ` என்பது ஆடவருட் சிறந்தவனுக்கு உரிய பெயர் ; அது , சிலவிடத்து , ` தலைவன் ` என்னும் பொருளையும் தரும் . அவ்வாறு இத்திருப்பதிகத்துள் வருவனவற்றை அறிந்துகொள்க . ` நம்பி ` என்றன பலவற்றுள்ளும் இறுதியில் உள்ள ஒன்றை யொழித்து , ஏனைய வெல்லாம் , இயல்பு விளிகளாய் நின்றன . ` நம்பீ என்ற திருப்பதிகம் ` என்ற பாடமும் காணப்படுதலால் , அவைகளை , ` நம்பீ ` என்றே பாடம் ஓதினும் இழுக்காது . இவ்வாறன்றி , அவைகளை விளியல்லாத பெயர்களாகக் கொள்ளுதல் கூடாமை ஓர்ந்துணர்க . ` மெய்யை ` என்றதில் ஐ சாரியை . உருபாகக் கொண்டு , ` மேனியை மறைக்குமாறு ` என்று உரைத்தலுமாம் . ` பூசிய , ஓதிய , ஏந்திய ` என்பவற்றின் ஈற்று அகரங்கள் தொகுத்தலாயின . ` கண்ணும் ` என்ற உம்மை , அசைநிலை . ` மூன்றும் உடையான் ` என்பதும் பாடம் . ` உடையாரொரு நம்பி ` என்பது , பாடம் அன்று . சிறுமை , புன்மை மேற்று . செறுதல் - பகைத்தல் ; அஃது அதனாற் செய்யப்படும் செயலைக் குறித்தது . ` நீயே ` என்னும் பிரிநிலை ஏகாரத்தொடு கூடிய எழுவாய் , எஞ்சி நின்றது . ` எல்லாப் பிறப்பும் ` ஏழாய் அடங்குதலின் , ` எழுபிறப்பும் ` என்று அருளினார் . ` எங்கள் ` என்றது , தம்போலும் அடியார் பலரையும் உளப்படுத்து . நம்பியை , தலைவனை என்றாற் போல முன்னிலைக்கண் அவ்விகுதி பெற்றுவருதல் பிற்காலத்து அருகி , அஃது எஞ்சி நிற்றலே பெரும்பான்மையாயிற்று . ` கண்டாய் ` என்றது , முன்னிலை யசை .


பாடல் எண் : 2
திங்கள்நம் பிமுடி மேல்அடி யார்பாற்
சிறந்தநம் பிபிறந் தவுயிர்க் கெல்லாம்
அங்கண்நம் பிஅருள் மால்விசும் பாளும்
அமரர்நம் பிகும ரன்முதல் தேவர்
தங்கள்நம் பிதவத் துக்கொரு நம்பி
தாதை என்றுன் சரண்பணிந் தேத்தும்
எங்கள்நம் பியென்னை ஆளுடை நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே


பொழிப்புரை :

திருமுடியில் பிறையை அணிந்த நம்பியே , அடியாரிடத்து இனிது விளங்கி நிற்கும் நம்பியே , பிறப்பினை எடுத்த உயிர்களுக்கெல்லாம் அவ்விடத்து மறைந்து நின்று அருள்செய்யும் நம்பியே , மயக்கத்தைத் தரும் வானுலகத்தை ஆள்கின்ற , தேவர்கட்குத் தலைவனாகிய நம்பியே , முருகன் முதலிய முத்தர்கட்குத் தலைவ னாகிய நம்பியே , வழிபடப்படுதற்கு ஒப்பற்ற நம்பியே , ` நீயே உலகிற்குத் தந்தை ` என்று தெளிந்து உன் திருவடிகளைப் பணிந்து துதிக்கின்ற எங்களுக்குச் சிறந்து நிற்கின்ற நம்பியே , என்னை ஆளாக உடைய நம்பியே , நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன் .


குறிப்புரை :

` அங்கண் அருள் நம்பி ` என மாற்றியுரைக்க . ` வினை வழிப்பட்ட வானுலகு ` என்பார் , ` மால் விசும்பு ` என்று அருளினார் . ` முதற்றேவர் ` என்றதில் , லகரம் கெடாது திரிந்து நின்றது , இசையின்பம் நோக்கி . ` ஒளியுடையவர் ` என்னும் பொருளதாகிய , ` தேவர் ` என்பது , ஈண்டு , ` ஞானம் மிக்கவர் ` என்னும் பொருளதாய் , முத்தரை உணர்த்திற்று . ` தவம் ` என்றது கடவுள் வழிபாட்டினை .


பாடல் எண் : 3
வருந்தஅன் றும்மத யானை யுரித்த
வழக்குநம் பிமுழக் குங்கடல் நஞ்சம்
அருந்துநம் பிஅம ரர்க்கமு தீந்த
அருளின்நம் பிபொரு ளாலரு நட்டம்
புரிந்தநம் பிபுரி நூலுடை நம்பி
பொழுதும் விண்ணும்முழு தும்பல வாகி
இருந்தநம் பிஎன்னை ஆளுடை நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே

பொழிப்புரை :
அன்று , மதத்தையுடைய யானையை அது வருந்துமாறு உரித்த நீதியை உடைய நம்பியே , ஓசையைச் செய்கின்ற கடலில் உண்டாகிய நஞ்சினை உண்ட நம்பியே , அதன்கண் தோன்றிய அமுதத்தைத் தேவர்களுக்கு ஈந்த அருளுடைய நம்பியே , அவ் வருளாகிய பொருள் காரணமாக அரிய நடனத்தைச் செய்கின்ற நம்பியே , முப்புரி நூலையுடைய நம்பியே , காலமும் வானமும் முதலிய எல்லாப் பொருள்களுமாய்ப் பலவாகி நிற்கின்ற நம்பியே , என்னை ஆளாக உடைய நம்பியே , நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன் .


குறிப்புரை :

அசுரன் யானையாய் வந்தமையின் , அதனை உரித்தமை நீதியாயிற்று . ` அருளென் நம்பி ` ` அருளு நம்பி ` என்பன வும் , ` வருநட்டம் ` என்பதும் பாடம் அல்ல . ` அப்பொருளால் ` எனச் சுட்டு வருவித்துரைக்க . ` முழுதும் ` என்றவிடத்து , ` ஆகி ` என்பது தொகுத்தலாயிற்று .


பாடல் எண் : 4
ஊறுநம் பிஅமு தாஉயிர்க் கெல்லாம்
உரியநம் பிதெரி யம்மறை அங்கம்
கூறுநம் பிமுனி வர்க்கருங் கூற்றைக்
குமைத்தநம் பிகுமை யாப்புலன் ஐந்தும்
சீறுநம் பிதிரு வெள்ளடை நம்பி
செங்கண்வெள் ளைச்செழுங் கோட்டெரு [ தென்றும்
ஏறுநம் பிஎன்னை ஆளுடை நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே


பொழிப்புரை :

உள்ளத்தில் , அமுதம்போல ஊற்றெழுகின்ற நம்பியே , எல்லா உயிர்கட்கும் புகலிடமாகிய நம்பியே , முனிவர்கட்கு , வேதத்தையும் , அதன் அங்கத்தையும் அறியக் கூறிய நம்பியே , அழித்தற்கரிய கூற்றுவனை அழித்த நம்பியே , அடக்குதற்கு அரிய ஐம்புல ஆசைகளையும் கடிந்தொதுக்கிய நம்பியே , திருவெள்ளடைக் கோயிலில் வாழும் நம்பியே , சிவந்த கண்களையும் , செழுமையான கொம்புகளையும் உடைய , வெண்மையான எருதையே எந்நாளும் ஏறுகின்ற நம்பியே , என்னை ஆளாக உடைய நம்பியே , நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன் .


குறிப்புரை :

` குமையாப் புலன் ` என்றதில் குமைத்தல் , அடக்குதல் . ` வெள்ளடை ` என்றது , திருக்குருக்காவூர்க்கோயிலின் பெயர் .


பாடல் எண் : 5
குற்றநம் பிகுறு காரெயில் மூன்றைக்
குலைத்தநம் பிசிலை யாவரை கையில்
பற்றுநம் பிபர மானந்த வெள்ளம்
பணிக்கும்நம் பியெனப் பாடுத லல்லால்
மற்றுநம் பிஉனக் கென்செய வல்லேன்
மதியிலி யேன்படு வெந்துய ரெல்லாம்
எற்றுநம் பிஎன்னை ஆளுடை நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே


பொழிப்புரை :

அறிவிலேனாகிய யான் படுகின்ற கொடிய துன்பங்களை எல்லாம் ஓட்டுகின்ற நம்பியே , என்னை ஆளாக உடைய நம்பியே , உன்னை , ` மலையை வில்லாக வளைத்த நம்பியே , பின்பு அதனைக் கையிற்பிடித்து நின்ற நம்பியே , பின்பு அதனால் பகைவரது மதில்கள் மூன்றை அழித்த நம்பியே , அடியார்களுக்குப் பேரின்ப வெள்ளத்தை அளித்தருளுகின்ற நம்பியே ` எனப் பாடுவதையன்றி ஒப்பற்ற பெரிய நம்பியாகிய உனக்கு யான் வேறு என் செய்ய வல்லேன் ! நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன் .


குறிப்புரை :

குறுதல் - அழித்தல் . குற்று - அழித்து . குலைத்தல் - வளைத்தல் . பலவகை அடைபுணர்த்து ` நம்பி ` எனப் பாடுதற் கிடையில் , அடையின்றியே ` நம்பி ` என்றதனால் , ` ஒப்பற்ற பெரிய நம்பி ` என்பது பெறப்பட்டது . உயிர்கள் உன்னை வாழ்த்துதல் இயலுமன்றி , கைம்மாறு யாதும் செய்தல் இயலாது என்றவாறு .


பாடல் எண் : 6
அரித்தநம் பிஅடி கைதொழு வார்நோய்
ஆண்டநம் பிமுன்னை ஈண்டுல கங்கள்
தெரித்தநம் பிஒரு சேவுடை நம்பி
சில்பலிக் கென்றகந் தோறுமெய் வேடம்
தரித்தநம் பிசம யங்களின் நம்பி
தக்கன்றன் வேள்விபுக் கன்றிமை யோரை
இரித்தநம் பிஎன்னை ஆளுடை நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே


பொழிப்புரை :

உனது திருவடியைக் கைகளால் தொழுகின்றவரது துன்பங்களை அரித்தொழிக்கின்ற நம்பியே , நெருங்கிய உலகங்கள் பலவற்றையும் முன்பு ஆக்கிய நம்பியே , பின்பு அவைகளைக் காக்கின்ற நம்பியே , ஒற்றை எருதையுடைய நம்பியே , இல்லந்தோறும் சென்று ஏற்கும் சில பிச்சைக்கென்று , திருமேனியில் அதற்குரிய வேடத்தைப் பூண்ட நம்பியே , சமயங்கள் பலவற்றிற்கும் தலை வனாகிய நம்பியே , அன்று தக்கன் வேள்விச்சாலையிற் புகுந்து , ஆங்கிருந்த தேவரை எல்லாம் அஞ்சியோடச் செய்த நம்பியே , என்னை ஆளாக உடைய நம்பியே , நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன் .


குறிப்புரை :

ஆளுதல் - புரத்தல் . ` முன்னை ` என்றதனால் , ` பின்னை ` என்பதும் பெறப்பட்டது . ` ஈண்டு உலகம் ` வினைத் தொகை . தெரித்தல் - தோற்றுவித்தல் . ` மருவனாய் மண்ணும் விண்ணும் தெரித்த நாளோ ` ( தி .6. ப .34 பா .1) என்று அருளிச் செய்தார் , திருநாவுக்கரசரும் .


பாடல் எண் : 7
பின்னைநம் பும்புயத் தான்நெடு மாலும்
பிரமனும் என்றிவர் நாடியுங் காணா
உன்னைநம் பிஒரு வர்க்கெய்த லாமே
உலகுநம் பிஉரை செய்யும தல்லால்
முன்னைநம் பிபின்னும் வார்சடை நம்பி
முழுதிவை இத்தனை யுந்தொகுத் தாண்ட
தென்னைநம் பிஎம் பிரானாய நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே

பொழிப்புரை :
` நப்பின்னை ` என்பவள் விரும்புகின்ற தோள்களையுடையவனாகிய நீண்ட உருவத்தையுடைய திருமாலும் , பிரமனும் என்று சொல்லப்பட்ட இவர்கள் தேடியும் காணமாட்டாத நம்பியே , உலகிற்கு ஒருவனாய நம்பியே , உன்னை வாழ்த்துதலாகிய அதுவன்றி , அணுகுதல் ஒருவர்க்கு இயல்வதோ ! எல்லாப் பொருட்கும் முன்னே உள்ள நம்பியே , பின்னிய நீண்டசடையையுடைய நம்பியே , உன் இயல்பெல்லாம் இவை போல்வனவே ; ஆயினும் , இத்தனையை யும் தோன்றாவாறு அடக்கி , பெருநம்பியாகிய நீ எளிவந்து என்னை ஆண்டது என்னையோ ? எமக்குப் பெருமானாகிய நம்பியே , நீயே எங்கட்கு எப்பிறப் பிலும் தலைவன் .


குறிப்புரை :

` காணா நம்பி ` என இயைக்க ` உலகு நம்பி ` என்றது , ` உலகிற்கு ஒரு நம்பி என்றதன் தொகை . ` அஃதல்லால் ` என்னும் ஆய்தம் , இசையின்பம் நோக்கித் தொகுக்கப்பட்டது . ` இவை ` என்றது , ` இத்தன்மையன ` என்னும் பொருளது . ` என்னை ` என்றது , வினா வினைக்குறிப்பு .


பாடல் எண் : 8
சொல்லைநம் பிபொரு ளாய்நின்ற நம்பி
தோற்றம் ஈறுமுத லாகிய நம்பி
வல்லைநம் பிஅடி யார்க்கருள் செய்ய
வருந்திநம் பிஉனக் காட்செய கில்லார்
அல்லல்நம் பிபடு கின்றதென் னாடி
அணங்கொரு பாகம்வைத் தெண்கணம் போற்ற
இல்லநம் பிஇடு பிச்சைகொள் நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே

பொழிப்புரை :
சொற்களாய் நிற்கும் நம்பியே , அச்சொற்களின் பொருள்களாய் நிற்கும் நம்பியே , எப்பொருளின் தோற்றத்திற்கும் , ஒடுக்கத்திற்கும் முதல்வனாகிய நம்பியே , அடியார்க்கு அருள்செய்ய வல்லையாகிய நம்பியே , உனக்கு ஆட்செய்ய மாட்டாதார் , உலகில் வருத்தத்தை அடைந்து அல்லல் படுதற்குக் காரணம் என் நம்பி நம்பீ ? பதினெண் கணங்களும் போற்ற , உமையை ஒருபாகத்தில் வைத் திருந்தும் , இல்லங்களை நாடிச்சென்று அங்கு உள்ளவர் இடுகின்ற பிச்சையை ஏற்கின்ற நம்பி . நம்பீ , நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன் .


குறிப்புரை :

` சொல்லை ` என்ற ஐகாரம் , சாரியை . ` தோற்றம் ஈறுகட்கு ` என உருபு விரிக்க . ` உனக்கு ஆட்படாதவர் வருந்துதற்குக் காரணம் அவர்களது வினை ` என்பது திருக்குறிப்பு . அடுக்கிநின்ற விளிகள் இரண்டனுள் முன்னது வியப்புப் பற்றியும் , பின்னது வேண்டிக்கோடல் பற்றியும் வந்தன . வியப்பு , அடியார்களை வினை தாக்காதொழிதல் பற்றி எழுந்ததென்க . ` வைத்தும் ` என்னும் சிறப் பும்மை தொகுத்தலாயிற்று . அஃது அவள் எல்லா அறங்களையும் வளர்ப்பவளாதலைக் குறித்தது . ` தாரி ருந்தட மார்பு நீங்காத் தைய லாள்உல குய்யவைத்த காரி ரும்பொழிற் கச்சிமூதூர்க் காமக் கோட்டம் [ உண்டாகநீர்போய் ஊரி டும்பிச்சை கொள்வ தென்னே ` என்று அருளிச்செய்தல் காண்க . ( தி .7 ப .5 பா .6)


பாடல் எண் : 9
காண்டுநம் பிகழற் சேவடி என்றுங்
கலந்துனைக் காதலித் தாட்செய்கிற் பாரை
ஆண்டுநம் பிஅவர் முன்கதி சேர
அருளும்நம் பிகுரு மாப்பிறை பாம்பைத்
தீண்டுநம் பிசென்னி யிற்கன்னி தங்கத்
திருத்துநம் பிபொய்ச் சமண்பொரு ளாகி
ஈண்டுநம் பிஇமை யோர்தொழு நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே


பொழிப்புரை :

நம்பியாகிய உனது கழல் அணிந்த திருவடியைக் காண்போம் என்னும் உறுதியோடும் மனம்பற்றி உன்னை விரும்பி உனக்கு ஆட்செய்கின்றவரை , நீ ஆட்கொண்டு அவர் விரைந்து உயர்கதி அடையுமாறு அருள்செய்கின்ற நம்பி நம்பீ , ஒளியையுடைய சிறந்த பிறை பாம்பைப் பொருந்துகின்ற முடியில் , ` கங்கை ` என்னும் நங்கை தங்கும்படி இனிது வைத்துள்ள நம்பி நம்பீ , சமணர்க்குப் பொய்ப்பொருளாய் மறைந்து நின்று , எங்கட்கு மெய்ப்பொருளாய் வெளிநிற்கின்ற நம்பியே , தேவர்கள் வணங்குகின்ற நம்பியே , நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன் .


குறிப்புரை :

` என்றும் ` என்ற உம்மை சிறப்பு . உம்மை இன்றியே ஓதுதலுமாம் . ` நம்பி நம்பி ` என்னும் அடுக்குக்கள் , வேண்டிக் கோடலின்கண் வந்தன . ` பிறை பாம்பைத் தீண்டும் ` என்றது , அஃது அச்சம் இன்றி வாழ்தலைக் குறித்தது . ` கண்ணி தங்க ` என்றும் , ` திருந்து நம்பி ` என்றும் பாடங்கள் உள்ளன . ` சமணுக்குப் பொய்ப் பொருளாகி ` என்க . ` ஈண்டு நம்பி ` வினைத்தொகை . அதன்முன் , ` எங்கட்கு ` என்பது வருவிக்கப்பட்டது .


பாடல் எண் : 10
கரக்கும்நம் பிகசி யாதவர் தம்மைக்
கசிந்தவர்க் கிம்மையோ டம்மையி லின்பம்
பெருக்குநம் பிபெரு கக்கருத்தா * * * *

பொழிப்புரை :
உன்னிடத்து மனம் உருகாதவருக்கு உன்னை மறைத்துக்கொள்கின்ற நம்பியே , அன்பு செய்பவர்க்கு இப்பிறப்பிலும் , வரும் பிறப்பிலும் இன்பத்தை மிகத் தருகின்ற நம்பியே , ...........


குறிப்புரை :

` கரத்தி நம்பி ` என்பதும் பாடம் . இத்திருப்பதிகத்துள் , இதற்குப் பின்னுள்ளவற்றை நாம் பெற்றிலேம் . இத்திருப்பாட்டின் பின்னுள்ள அடிகள் மறைந்துபோயின

நன்றி: http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=7&Song_idField=7063

விருப்பம் :)