Monday, June 17, 2013

போற்றித் திருஅகவல் போற்றிகள் : திருவாசகம்

திருவாசகம் : போற்றித் திருஅகவல்
மாணிக்க வாசகர்




இறைவனைப் பலவாறு போற்றித் துதிக்கும் விதமாக 'போற்றி..! போற்றி..!!'  எனும் விதத்தில் மாணிக்க வாசகரின் திருவாசகந்தனில் உள்ள போற்றித்திருவகவல் பாடல் வரிகள் நினைந்து நினைந்து இன்புறத்தக்கவை..!! 

பாடல்:

...........................................................
சாயா அன்பினை நாடொறுந் தழைப்பவர்
தாயே யாகி வளர்த்தனை போற்றி
மெய்தரு வேதிய னாகி வினைகெடக்
கைதர வல்ல கடவுள் போற்றி
ஆடக மதுரை அரசே போற்றி 90

கூடல் இலங்கு குருமணி போற்றி
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்றெனக் காரமு தானாய் போற்றி
மூவா நான்மறை முதல்வா போற்றி
சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி 95
மின்னா ருருவ விகிர்தா போற்றி
கல்நார் உரித்த கனியே போற்றி
காவாய் கனகக் குன்றே போற்றி
ஆவா என்றனக் கருளாய் போற்றி
படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி 100

இடரைக் களையும் எந்தாய் போற்றி
ஈச போற்றி இறைவ போற்றி
தேசப் பளிங்கின் திரளே போற்றி
அரைசே போற்றி அமுதே போற்றி
விரைசேர் சரண விகிர்தா போற்றி 105
வேதி போற்றி விமலா போற்றி
ஆதி போற்றி அறிவே போற்றி
கதியே போற்றி கனியே போற்றி
நதிசேர் செஞ்சடை நம்பா போற்றி
உடையாய் போற்றி உணர்வே போற்றி 110

கடையேன் அடிமை கண்டாய் போற்றி
ஐயா போற்றி அணுவே போற்றி
சைவா போற்றி தலைவா போற்றி
குறியே போற்றி குணமே போற்றி
நெறியே போற்றி நினைவே போற்றி 115
வானோர்க் கரிய மருந்தே போற்றி
ஏனோர்க் கெளிய இறைவா போற்றி
மூவேழ் சுற்றம் முரணுறு நரகிடை
ஆழா மேயருள் அரசே போற்றி
தோழா போற்றி துணைவா போற்றி 120

வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி
முத்தா போற்றி முதல்வா போற்றி
அத்தா போற்றி அரனே போற்றி
உரையுணர் விறந்த ஒருவ போற்றி
விரிகடல் உலகின் விளைவே போற்றி 125
அருமையில் எளிய அழகே போற்றி
கருமுகி லாகிய கண்ணே போற்றி
மன்னிய திருவருள் மலையே போற்றி
என்னையும் ஒருவ னாக்கி இருங்கழல்
சென்னியில் வைத்த சேவக போற்றி 130

தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி
அழிவிலா ஆனந்த வாரி போற்றி
அழிவதும் ஆவதுங் கடந்தாய் போற்றி
முழுவதும் இறந்த முதல்வா போற்றி
மானோர் நோக்கி மணாளா போற்றி 135
வானகத் தமரர் தாயே போற்றி
பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி 140

வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி
அளிபவர் உள்ளத் தமுதே போற்றி
கனவிலுந் தேவர்க் கரியாய் போற்றி
நனவிலும் நாயேற் கருளினை போற்றி
இடைமரு துறையும் எந்தாய் போற்றி 145
சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி
ஆரூ ரமர்ந்த அரசே போற்றி
சீரார் திருவை யாறா போற்றி
அண்ணா மலையெம் அண்ணா போற்றி
கண்ணார் அமுதக் கடலே போற்றி 150

ஏகம் பத்துறை யெந்தாய் போற்றி
பாகம் பெண்ணுரு வானாய் போற்றி
பராய்த்துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
மற்றோர் பற்றிங் கறியேன் போற்றி 155
குற்றா லத்தெங் கூத்தா போற்றி
கோகழி மேவிய கோவே போற்றி
ஈங்கோய் மலையெம் எந்தாய் போற்றி
பாங்கார் பழனத் தழகா போற்றி
கடம்பூர் மேவிய விடங்கா போற்றி 160

அடைந்தவர்க் கருளும் அப்பா போற்றி
இத்தி தன்னின் கீழிரு மூவர்க்
கத்திக் கருளிய அரசே போற்றி
தென்னா டுடைய சிவனே போற்றி
எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி 165
ஏனக் குருளைக் கருளினை போற்றி
மானக் கயிலை மலையாய் போற்றி
அருளிட வேண்டும் அம்மான் போற்றி
இருள்கெட அருளும் இறைவா போற்றி
தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி 170

களங்கொளக் கருத அருளாய் போற்றி
அஞ்சே லென்றிங் கருளாய் போற்றி
நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி
அத்தா போற்றி ஐயா போற்றி
நித்தா போற்ற நிமலா போற்றி 175
பத்தா போற்றி பவனே போற்றி
பெரியாய் போற்றி பிரானே போற்றி
அரியாய் போற்றி அமலா போற்றி
மறையோர் கோல நெறியே போற்றி
முறையோ தரியேன் முதல்வா போற்றி 180

உறவே போற்றி உயிரே போற்றி
சிறவே போற்றி சிவமே போற்றி
மஞ்சா போற்றிமணாளா போற்றி
பஞ்சே ரடியாள் பங்கா போற்றி
அலந்தேன் நாயேன் அடியேன் போற்றி 185
இலங்கு சுடரெம் ஈசா போற்றி
கவைத்தலை மேவிய கண்ணே போற்றி
குவைப்பதி மலிந்த கோவே போற்றி
மலைநா டுடைய மன்னே போற்றி
கலையா ரரிகே சரியாய் போற்றி 190

திருக்கழுக் குன்றிற் செல்வா போற்றி
பொருப்பமர் பூவணத் தரனே போற்றி
அருவமும் உருவமும் ஆனாய் போற்றி
மருவிய கருணை மலையே போற்றி
துரியமும் இறந்த சுடரே போற்றி 195
தெரிவரி தாகிய தெளிவே போற்றி
தோளா முத்தச் சுடரே போற்றி
ஆளா னவர்கட் கன்பா போற்றி
ஆரா அமுதே அருளே போற்றி
பேரா யிரமுடைப் பெம்மான் போற்றி 200

தாளி அறுகின் தாராய் போற்றி
நீளொளி யாகிய நிருத்தா போற்றி
சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி
சிந்தனைக் கரிய சிவமே போற்றி
மந்தர மாமலை மேயாய் போற்றி 205
எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி
புலிமுலை புல்வாய்க் கருளினை போற்றி
அலைகடல் மீமிசை நடந்தாய் போற்றி
கருங்குரு விக்கன் றருளினை போற்றி
இரும்புலன் புலர இசைந்தனை போற்றி 210

படியுறப் பயின்ற பாவக போற்றி
அடியொடு நடுவீ றானாய் போற்றி
நரகொடு சுவர்க்கம் நானிலம் புகாமற்
பரகதி பாண்டியற் கருளினை போற்றி
ஒழிவற நிறைந்த ஒருவ போற்றி 214
செழுமலர்ச் சிவபுரத் தரசே போற்றி
கழுநீர் மாலைக் கடவுள் போற்றி
தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி
பிழைப்பு வாய்ப்பொன் றறியா நாயேன்
குழைத்தசொன் மாலை கொண்டருள் போற்றி 220

புரம்பல எரித்த புராண போற்றி
பரம்பரஞ் சோதிப் பரனே போற்றி
போற்றி போற்றி புயங்கப் பெருமான்
போற்றிபோற்றி புராண காரண
போற்ற போற்றி சயசய போற்றி 225


பொழிப்புரை:

தளராத பேரன்பினை, தினந்தோறும், வளர்ப்பவர்களுக்குத் தாயாகியே அவர்களை வளர்த்தவனே! வணக்கம்.
மெய்யுணர்வை நல்கும் மறையோனாகி, வினைகள் நீங்க, கைகொடுத்துக் காப்பாற்ற வல்ல கடவுளே! வணக்கம். பொன்மயமா யிருக்கிற மதுரைக்கு அரசனே! வணக்கம். 

கூடற்பதியில் விளங்கு கின்ற நன்னிற மாணிக்கமே! வணக்கம். தென்தில்லையம்பலத்தில் ஆடுவோனே! வணக்கம். இன்று எனக்கு அரிய அமிர்தமாயினவனே! வணக்கம். கெடாத நான்கு வேதங்களுக்கும் முதல்வனே! வணக்கம். இடபம் பொருந்திய வெற்றிக் கொடியை உடைய சிவபிரானே! வணக்கம். மின்னல் ஒளி பொருந்திய பல அழகிய வேறுவேறு உருவங்களை உடையவனே! வணக்கம். கல்லில் நார் உரித்தது போல என் மனத்தை இளகச் செய்த கனியே! வணக்கம். பொன்மலை போன்றவனே! காத்தருள்வாய். வணக்கம். ஐயோ! எனக்கருள் செய்வாய். நினக்கு வணக்கங்கள். எல்லா உலகங்களையும் படைப் பவனே! காப்பவனே! ஒடுக்குபவனே! வணக்கம். 

பிறவித்துன்பத்தை நீக்கி அருள் புரிகின்ற எம் தந்தையே! வணக்கம். ஆண்டவனே! வணக்கம். எங்கும் நிறைந்தவனே! வணக்கம். ஒளியை வீசுகின்ற படிகத்தின் திரட்சியே! வணக்கம்.
தலைவனே! வணக்கம். சாவாமையைத் தரும் மருந்தான வனே! வணக்கம். நறுமணம் பொருந்திய திருவடியையுடைய நீதியாளனே! வணக்கம். வேதத்தை உடையவனே! வணக்கம். குற்ற மற்றவனே! வணக்கம். முதல்வனே! வணக்கம். அறிவாய் இருப் பவனே! வணக்கம், வீட்டு நெறியானவனே! வணக்கம். கனியின் சுவை போன்றவனே! வணக்கம். கங்கையாறு தங்கிய சிவந்த சடையை யுடைய நம்பனே! வணக்கம். எல்லாப் பொருள்களையும் உடைய வனே! வணக்கம். உயிர்களின் உணர்விற்கு உணர்வாய் இருப்பவனே! வணக்கம். 

கடையேனுடைய அடிமையைக் கடைக்கணித்து ஏற்றுக் கொண்டவனே! வணக்கம். பெரியோனே! வணக்கம். நுண்ணியனே! வணக்கம். சைவனே! வணக்கம், தலைவனே! வணக்கம், அனற் பிழம்பாகிய இலிங்கவடிவினனே! வணக்கம். எண்குணங்கள் உடையவனே! வணக்கம். நல்வழியானவனே! வணக்கம். உயிர்களின் நினைவில் கலந்துள்ளவனே! வணக்கம். தேவர்களுக்கும் அரிதாகிய மருந்தானவனே! வணக்கம். மற்றையோர்க்கு எளிமையான இறைவனே! வணக்கம். இருபத்தொரு தலை முறையில் வருகின்ற சுற்றத்தார் வலிய நரகத்தில் ஆழ்ந்து போகாமல் அருள் செய்கின்ற அரசனே! வணக்கம். தோழனே! வணக்கம். துணைபுரிபவனே! வணக்கம். 

என்னுடைய வாழ்வானவனே! வணக்கம். என் நிதியானவனே! வணக்கம். இயல்பாகவே பாசங்கள் இல்லாதவனே! வணக்கம். தலைவனே! வணக்கம். அப்பனே! வணக்கம். பாசத்தை அழிப்பவனே! வணக்கம். சொல்லையும் அறிவையும் கடந்த ஒப்பற்றவனே! வணக்கம். விரிந்த கடல் சூழ்ந்த உலக வாழ்வின் பயனே! வணக்கம்.
அருமையாய் இருந்தும் எளிமையாய் வந்தருளும் அழகனே! வணக்கம். கார்மேகம் போல அருள் புரிகின்ற கண் போன்றவனே! வணக்கம். நிலைபெற்ற பெருங்கருணை மலையே! வணக்கம். என்னையும் ஓர் அடியவனாக்கிப் பெருமையாகிய திருவடியை என் தலையில் வைத்த வீரனே! வணக்கம். 

வணங்கிய கையினரின் துன்பங்களை நீக்குவோனே! வணக்கம். அழிவில்லாத இன்பக்கடலே! வணக்கம். ஒடுக்கமும் தோற்றமும் கடந்தவனே! வணக்கம். எல்லாம் கடந்த முதல்வனே! வணக்கம். மானை நிகர்த்த நோக்கத்தையுடைய உமா தேவியின் மணவாளனே! வணக்கம். விண்ணுலகத்திலுள்ள தேவர்களுக்குத் தாய் போன்றவனே! வணக்கம். பூமியில் ஐந்து தன்மைகளாய்ப் பரவியிருப்பவனே! வணக்கம். நீரில் நான்கு தன்மைகளாய் நிறைந்து இருப்பவனே! வணக்கம். நெருப்பில் மூன்று தன்மைகளாய்த் தெரிபவனே! வணக்கம். காற்றில் இரண்டு தன்மைகளாய் மகிழ்ந்து இருப்பவனே! வணக்கம். ஆகாயத்தில் ஒரு தன்மையாய்த் தோன்றியவனே! வணக்கம். 

கனிபவருடைய மனத்தில் அமுதமாய் இருப்பவனே! வணக்கம். கனவிலும் தேவர்கட்கு அருமையானவனே! வணக்கம். நாய் போன்ற எனக்கு விழிப்பிலும் அருள் செய்தவனே! வணக்கம்.
திருவிடை மருதூரில் வீற்றிருக்கும் எம் அப்பனே! வணக்கம். சடையில் கங்கையைத் தாங்கியவனே! வணக்கம். திருவாரூரில் தங்கியருளிய தலைவனே! வணக்கம். சிறப்புப் பொருந்திய திருவையாற்றில் உள்ளவனே! வணக்கம். அண்ணாமலையிலுள்ள எம்மேலோனே! வணக்கம். கண்ணால் நுகரப்படும் அமுதக் கடலாய் உள்ளவனே! வணக்கம். 

திருவேகம்பத்தில் வாழ்கின்ற எந்தையே! வணக்கம். அங்கு ஒரு பாகம் பெண்ணுருவாகியவனே! வணக்கம். திருப்பராய்த் துறையில் பொருந்திய மேலோனே! வணக்கம். திருச்சிராப்பள்ளியில் எழுந்தருளிய சிவபிரானே! வணக்கம். இவ்விடத்து உன்னையன்றி மற்றொருபற்றையும் யான் அறிந்திலேன் ஆதலின் வணக்கம். திருக்குற்றாலத்தில் எழுந்தருளியுள்ள எம் கூத்தனே! வணக்கம். திருப் பெருந்துறையில் பொருந்திய இறைவனே! வணக்கம். திரு ஈங்கோய் மலையில் வாழ்கின்ற எம் தந்தையே! வணக்கம். வனப்பு நிறைந்த திருப்பழனத்தில் உள்ள அழகனே! வணக்கம். திருக்கடம்பூரில் எழுந்தருளிய சுயம்புவே! வணக்கம்.

உன்னை அடுத்தவர்க்கு அருள் செய்கின்ற அப்பனே! வணக்கம். கல்லால மரத்தின் கீழ் இயக்கியர் அறுவருக்கும், வெள்ளானைக்கும் அருள் செய்த அரசனே! வணக்கம். மற்றும்பல தலங்கள் உள்ள தென்னாடுடைய சிவபிரானே! வணக்கம். வேறு பல நாட்டவர்களுக்கும் வழிபடு தெய்வமானவனே! வணக்கம். பன்றிக்குட்டிகளுக்குக் கருணை காட்டி அருளியவனே! வணக்கம். பெரிய கயிலாயமலையில் இருப்பவனே! வணக்கம். அம்மானே! அருள் செய்ய வேண்டும். அஞ்ஞான இருள் அழியும்படி அருள் செய்கின்ற இறைவனே! வணக்கம். அடியேன் துணையற்றவனாய்த் தளர்ச்சி அடைந்தேன்; வணக்கம்.

நிலையான இடத்தைப் பெற எண்ணும்படி அருள்புரிவாய், வணக்கம். அஞ்சாதே என்று இப்பொழுது எனக்கு அருள் செய்ய வேண்டும்; வணக்கம். நஞ்சையே அமுதமாக விரும்பினவனே! வணக்கம், அப்பனே! வணக்கம், குருவே! வணக்கம். என்றும் உள்ளவனே! வணக்கம். குற்றம் அற்றவனே! வணக்கம். தலைவனே! வணக்கம். எவற்றுக்கும் பிறப்பிடமானவனே! வணக்கம். பெரியவனே! வணக்கம். வள்ளலே! வணக்கம், அரியவனே! வணக்கம். பாசம் இல்லாதவனே! வணக்கம். அந்தணர் கோலத்தோடு வந்து அருள் புரிந்த நீதியானவனே! வணக்கம். முறையோ பொறுக்க மாட்டேன். முதல்வனே! வணக்கம். 

சுற்றமானவனே! வணக்கம். உயிர்க்கு உயிராய் இருப்பவனே! வணக்கம். சிறந்த பொருளான வனே! வணக்கம். மங்கலப் பொருளானவனே! வணக்கம். ஆற்ற லுடையவனே! வணக்கம். அழகுடையவனே! வணக்கம். செம்பஞ்சுக் குழம்பு பூசிய அழகிய பாதங்களை உடைய உமாதேவி பாகனே! வணக்கம். நாயினேன் வருத்த முற்றேன். நின் அடியவன் நினக்கு வணக்கம். விளங்குகின்ற ஒளியையுடைய எம் ஆண்டவனே! வணக்கம். கவைத்தலை என்னும் திருப்பதியில் விரும்பி எழுந்தருளிய கண் போன்றவனே! வணக்கம். குவைப்பதி என்னும் ஊரிலே மகிழ்ந்து இருந்த இறைவனே! வணக்கம். மலைநாட்டை உடைய மன்னனே! வணக்கம். கல்வி மிகுந்த அரிகேசரி யென்னும் ஊரினை உடையாய்! வணக்கம். 

திருக்கழுக்குன்றிலுள்ள செல்வனே! வணக்கம். கயிலை மலையில் வீற்றிருக்கும், திருப்பூவணத் திலுள்ள பெருமானே! வணக்கம். அருவம் உருவம் என்னும் திருமேனிகளைக் கொண்டவனே! வணக்கம். என்னிடத்தில் வந்து பொருந்திய அருள் மலையே! வணக்கம்.
சாக்கிரம் முதலிய நான்கு நிலையும் கடந்த பேரறிவே! வணக்கம். அறிதற்கு அருமையாகிய தெளிவே! வணக்கம். துளைக்கப் படாத தூய முகத்தின் சோதியே! வணக்கம். அடிமையானவர்க்கு அன்பனே! வணக்கம். தெவிட்டாத அமுதமே! திருவருளே! வணக்கம். ஆயிரம் திருப்பெயர்களை உடைய பெருமானே! வணக்கம். 

நீண்ட தாளினையுடைய அறுகம்புல் கட்டிய மாலை அணிந் தவனே! வணக்கம். பேரொளி வடிவாகிய கூத்தப் பெருமானே! வணக்கம். சந்தனக் குழம்பை அணிந்த அழகனே! வணக்கம். நினைத்தற்கரிய சிவமே! வணக்கம். மந்திர நூல் வெளிப்பட்ட பெரிய மகேந்திர மலையில் வீற்றிருந்தவனே! வணக்கம். எங்களை உய்யும்படி ஆட்கொள்வோனே! வணக்கம். புலியின் பாலை மானுக்கு ஊட்டுமாறு அருளினவனே! வணக்கம். அசையாநின்ற கடலின் மேல் நடந்தவனே! வணக்கம். கரிக் குருவிக்கு அன்று அருள் செய்தவனே! வணக்கம். வலிய ஐம்புல வேட்கைகள் அற்றொழியும் உள்ளம் பொருந்தி அருளினவனே! வணக்கம். 

நிலத்தின் கண் பொருந்தப் பழகிய பல்வகைத் தோற்ற முடையவனே! வணக்கம். உலகத்திற்கு எல்லாம் முதலும் நடுவும் முடிவுமானவனே! வணக்கம். நாகம், விண்ணுலகம், நிலவுலகம் என்ற மூவிடத்தும் புகாதபடி பாண்டியனுக்கு மேலான வீட்டுலகை நல்கி அருளியவனே! வணக்கம். எங்கும் நீக்கமற நிறைந்த ஒருவனே! வணக்கம். செழுமை மிக்க மலர் நிறைந்த திருப்பெருந்துறைத் தலைவனே! வணக்கம்.
செங்கழுநீர் மாலையை அணிந்த கடவுளே! வணக்கம். வணங்குவோருடைய மயக்கத்தை அறுப்பவனே! வணக்கம். தவறு யாது? பொருத்தம் யாது? என்று அறியாத நாயினேன் குழைந்து சொன்ன சொல் மாலையைக் கொண்டருள வேண்டும்; வணக்கம். 

மூன்றுபுரங்களை எரித்த பழையோனே! வணக்கம். மேலான ஒளியை உடைய மேலோனே! வணக்கம். பாம்பை அணிந்த பெரியோனே! வணக்கம். பழமையானவனே! எல்லாவற்றிற்கும் மூல காரணனே! வணக்கம். வணக்கம். வெற்றியுண்டாக வணக்கம்! வணக்கம்!


நன்றி: http://thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=8&Song_idField=8104&padhi=25&button=செல்க



விருப்பம் :)