Tuesday, July 15, 2014

ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற - தெய்வமணி மாலை - திருவருட்பா (வள்ளலார்)

தெய்வமணி மாலை (ஐந்தாவது திருமுறை-பாடல் 2938)
சென்னைக் கந்தகோட்டம்
பன்னிரு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


திருச்சிற்றம்பலம்


8. 
ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
        உத்தமர்தம் உறவுவேண்டும்
    உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார்
        உறவுகல வாமை வேண்டும்
பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும் பொய்மை
        பேசாதிருக்க வேண்டும்
    பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மத மானபேய்
        பிடியா திருக்க வேண்டும்
மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை
        மறவா திருக்க வேண்டும்
    மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும் நோயற்ற
        வாழ்வில் நான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள்வளர்
        தலம் ஓங்கு கந்தவேளே
    தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
        சண்முகத் தெய்வமணியே


திருச்சிற்றம்பலம்

Monday, July 14, 2014

திரு ஓங்கு புண்ணிய செயல் ஓங்கி - தெய்வமணி மாலை - திருவருட்பா (வள்ளலார்)


தெய்வமணி மாலை
சென்னைக் கந்தகோட்டம்
பன்னிரு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

1.  
திருஓங்கு புண்ணியச் செயல்ஓங்கி அன்பருள்
         திறலோங்கு செல்வம்ஓங்கச்
    செறிவோங்க அறிவோங்கி நிறைவான இன்பம்
         திகழ்ந்தோங்க அருள்கொடுத்து 
மருஓங்கு செங்கமல மலர்ஓங்கு வணம்ஓங்க
         வளர்கருணை மயம்ஓங்கிஓர்
     வரம்ஓங்கு தெள்அமுத வயம்ஓங்கி ஆனந்த
         வடிவாகி ஓங்கிஞான
உருஓங்கும் உணர்வின்நிறை ஒளிஓங்கி ஓங்கும்மயில்
         ஊர்ந்தோங்கி எவ்வுயிர்க்கும்
     உறவோங்கும் நின்பதம்என் உளம்ஓங்கி வளம்ஓங்க
         உய்கின்ற நாள்எந்தநாள்
தருஓங்கு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
         தலம்ஓங்கு கந்தவேளே
     தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
         சண்முகத் தெய்வமணியே. 
திருச்சிற்றம்பலம்
மிக்க நன்றி: http://www.thiruarutpa.org/thirumurai/v/T1/tm/theyvamani_maalai 

 

விருப்பம் :)