Pages

Saturday, May 4, 2013

உயிரை மயக்கும் மாயைகளும் மெய்தரு வேதியனும் : திருவாசகப் பகுதி

திருவாசகம் : போற்றித் திருஅகவல்
மாணிக்க வாசகர்




ஓர் உயிர் எவ்வாறெல்லாம் மாயைகளுக்கு ஆட்படுகிறது, அதிலிருந்து தப்புவித்து மெய்யறிவைத் தரும் மறையோனாக வந்து வினைகளை கெட கடவுள் கைதரும் பாங்கை மாணிக்கவாசகர் விவரமாக விளக்குகின்றார்.....

பாடலின் பகுதி:

...........................................
ஆறு கோடி மாயா சத்திகள்
வேறு வேறுதம் மாயைகள் தொடங்கின 45

ஆத்த மானார் அயலவர் கூடி
நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர்
சுற்ற மென்னுந் தொல்பசுக் குழாங்கள்
பற்றி யழைத்துப் பதறினர் பெருகவும்
விரத மேபர மாகவே தியருஞ் 50

சரத மாகவே சாத்திரங் காட்டினர்
சமய வாதிகள் தத்தம் மதங்களே
அமைவ தாக அரற்றி மலைந்தனர்
மிண்டிய மாயா வாத மென்னுஞ்
சண்ட மாருதஞ் சுழித்தடித் தாஅர்த் 55
துலோகா யதனெனும் ஒண்டிறற் பாம்பின்
கலாபே தத்த கடுவிட மெய்தி
அதிற்பெரு மாயை யெனைப்பல சூழவும்
தப்பா மேதாம் பிடித்தது சலியாத்
தழலது கண்ட மெழுகது போலத் 60

தொழுதுளம் உருகி அழுதுடல் கம்பித்
தாடியும் அலறியும் பாடியும் பரவியுங்
கொடிறும் பேதையுங் கொண்டது விடாதெனும்
படியே யாகிநல் லிடையறா அன்பிற்
பசுமரத் தாணி அறைந்தாற் போலக் 65
கசிவது பெருகிக் கடலென மறுகி
அகங்குழைந் தனுகுல மாய்மெய் விதிர்த்துச்
சகம்பேய் என்று தம்மைச் சிரிப்ப
நாணது ஒழிந்து நாடவர் பழித்துரை
பூணது வாகக் கோணுத லின்றிச் 70

சதுரிழந் தறிமால் கொண்டு சாருங்
கதியது பரமா அதிசய மாகக்
கற்றா மனமெனக் கதறியும் பதறியும்
மற்றோர் தெய்வங் கனவிலும் நினையா
தருபரத் தொருவன் அவனியில் வந்து 75
குருபர னாகி அருளிய பெருமையைச்
சிறுமையென் றிகழாதே திருவடி யிணையைப்
பிறிவினை யறியா நிழலது போல
முன்பின் னாகி முனியா தத்திசை
என்புநைந் துருகி நெக்குநெக் கேங்கி 80

அன்பெனும் ஆறு கரையது புரள
நன்புலன் ஒன்றி நாதஎன் றரற்றி
உரைதடு மாறி உரோமஞ் சிலிர்ப்பக்
கரமலர் மொட்டித் திருதயம் மலரக்
கண்களி கூர நுண்துளி அரும்பச் 85
சாயா அன்பினை நாடொறுந் தழைப்பவர்
தாயே யாகி வளர்த்தனை போற்றி
மெய்தரு வேதிய னாகி வினைகெடக்
கைதர வல்ல கடவுள் போற்றி 
.......................

பொழிப்புரை:

................ ஆறுகோடியெனத் தக்கனவாய் மயக்கம் செய்யவல்ல சடவுலக ஆற்றல்கள், வேறு வேறாகிய தம் மாயைகளைச் செய்யத் தொடங்கினவாகவும், 

அயலா ராயினோரும் கடவுள் இல்லையென்று பொய் வழக்குப் பேசி நாவில் தழும்பேறப் பெற்றனர். உறவினர் என்கின்ற பசுக்கூட்டங்கள் பின் பற்றி அழைத்துப் பதறிப் பெருகவும், மறையோரும், விரதத்தையே மேன்மையான சாதனம் என்று தம் கொள்கை உண்மையாகும் படி நூற்பிரமாணங்களைக் காட்டினார்களாகவும், சமயவாதிகள் எல்லாம் தம்தம் மதங்களே ஏற்புடைய மதங்களாகும் எனச் சொல்லி ஆர வாரித்துப் பூசலிட்டார்களாகவும்,

உறுதியான மாயாவாதம் என்கிற பெருங்காற்றானது சுழன்று வீசி முழங்கவும், உலோகாயத மதம் என்கிற, ஒள்ளிய வலிமையுடைய பாம்பினது கலை வேறுபாடு களையுடைய கொடிய நஞ்சு வந்து சேர்ந்து அதிலுள்ள பெருஞ் சூழ்ச்சிகள் எத்தனையோ பலவாகச் சுற்றித் தொடரவும்,

முற்கூறிய அவற்றால் வழுவாது தாம் பிடித்த கொள்கையை விட்டு விடாமல், நெருப்பினிற் பட்ட மெழுகுபோல வணங்கி மனம் உருகி, அழுது உடல் நடுக்கமடைந்து ஆடுதல் செய்தும், அலறுதல் செய்தும், பாடுதல் செய்தும், வழிபட்டும், குறடும் மூடனும் தாம் பிடித்ததை விடா என்கிற முறைமையேயாகி நல்ல, இடையறாத கடவுள் பத்தியில் பச்சை மரத்தில் அடித்த ஆணி திண்மையாய்ப் பற்றி நிற்பது போல உறைத்து நின்று உருக்கம் மிகுந்து கடல் அலைபோல அலைவுற்று மனம் வாடி, அதற்கு ஏற்ப உடல் அசைவுற்று உலகவர் பேய் என்று தம்மை இகழ்ந்து சிரிக்க வெட்கமென்பது தவிர்ந்து, நாட்டில் உள்ளவர் கூறும் குறைச்சொற்களை அணியாக ஏற்று, மனம் கோணுதல் இல்லாமல், தமது திறமை ஒழிந்து,

சிவஞானம் என்னும் உணர்வினால் அடையப் பெறுகின்ற மேலான வியப்பாகக் கருதி கன்றினை உடைய பசுவின் மனம் போல அலறியும் நடுங்கியும், வேறொரு தெய்வத்தைக் கனவிலும் நினையாமல், அரிய மேலான ஒருவன் பூமியில் வந்து குருமூர்த்தியாகி அருள் செய்த பெருமையை எளிமையாக எண்ணி அசட்டை செய்யாது திருவடிகள் இரண்டையும் உருவைவிட்டு அகலாத நிழலைப் போல வெறுக்காமல், முன்பின்னும் நீங்காது நின்று அந்தத் திசை நோக்கி நினைந்து எலும்பு மெலிவுற்று உருக, மிகக் கனிவுற்று இரங்கிப் பத்தியென்னும் நதியானது கரை புரண்டு ஒட, நல்ல புலனறிவு ஒருமைப்பட்டு, `நாதனே!` என்று கூவி அழைத்துச் சொற்கள் குழறி, மயிர்சிலிர்க்க, கைம்மலர் குவித்து நெஞ்சத் தாமரை விரிய, கண்கள் களிப்பு மிக நுண்ணிய துளிகள் அரும்பத் தளராத பேரன்பினை, தினந்தோறும், வளர்ப்பவர்களுக்குத் தாயாகியே அவர்களை வளர்த்தவனே! வணக்கம்.

மெய்யுணர்வை நல்கும் மறையோனாகி, வினைகள் நீங்க, கைகொடுத்துக் காப்பாற்ற வல்ல கடவுளே! வணக்கம்.  ........................