Saturday, March 26, 2011

மாசில் வீணையும் மாலை மதியமும் - திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஐந்தாம் திருமுறை)

90 பொது
பாடல் எண் : 1
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.


பொழிப்புரை :
 இறைவனாகிய எந்தையின் திருவடி நீழல் குற்றமற்ற வீணையின் நாதமும் , மாலையிலே தோன்றிய நிலவின் தண்மையும் , வீசுகின்ற தென்றலின் சாயலும் , செறிந்த இளவேனிலின் மாட்சியும் , ஒலிக்கும் வண்டுகள் மொய்க்கும் பொய்கையின் குளிர்ச்சியும் போன்று இன்பம் பயப்பதாகும் .

பாடல் எண் : 2
நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும்
நமச்சி வாயவே நானறி விச்சையும்
நமச்சி வாயவே நாநவின் றேத்துமே
நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே.


பொழிப்புரை :
 ஞானமும் , கல்வியும் , நானறிந்த வித்தையும் பஞ்சாட்சரமே ; நா கூறி வழிபடுவதும் அதனையே ; நன்னெறி காட்டுவதும் அத்திருமந்திரமேயாகும் .

குறிப்புரை :
 ஞானமும் - பரஞானம் . கல்வி - அபரஞானம் . ஞானமும் கல்வியும் - கல்வியால் விளையும் அறிவும் கல்வியும் . நானறிவிச்சை - நான் அறிந்தனவாய மந்திரம் அல்லது கலையுணர்வு . நன்னெறி - ஞானம் , வீடுபேறடையும் வழி .



பாடல் எண் : 3
ஆளா காரா ளானாரை யடைந் துய்யார்
மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்
தோளா தசுரை யோதொழும் பர்செவி
வாளா மாய்ந்துமண் ணாகிக் கழிவரே.


பொழிப்புரை :
 இறைவனுக்கு ஆளாகமாட்டார் ; அவ்வாறு ஆளாகிய மெய்யடியார்களைச் சார்ந்து உய்யவும் மாட்டார் . மீளா ஆளாய் மெய்ம்மையுள் நிற்கும் ஆற்றல் இல்லார் ; அத்தகைய இழிந்தவர் செவிகள் துளையிட்டுப் பயன்படுத்தவியலாத செவியோ ? அந்தோ ! வீணே இறந்து மண்ணாகி ஒழிவர்! 


பாடல் எண் : 4
நடலை வாழ்வுகொண் டென்செய்திர் நாணிலீர்
சுடலை சேர்வது சொற்பிர மாணமே
கடலின் நஞ்சமு துண்டவர் கைவிட்டால்
உடலி னார்கிடந் தூர்முனி பண்டமே.


பொழிப்புரை :
 நாணமற்றவர்களே ! துன்பம் மிக்க வாழ்வினைக் கொண்டு என்ன செய்வீர் ? நீர் இறுதியில் சுடுகாடு அடைவது உறுதி என்பதற்கு ஆன்றோர் சொற்களே சான்று . திருப்பாற்கடலினின்றெழுந்த ஆலகால விடத்தை உண்ட இறைவர் கைவிட்டால் , உடல் கிடந்து ஊரார் வெறுக்கும் பொருளாகிவிடும் .

குறிப்புரை :
 நடலை - துன்பம் . என்செய்திர் - உயிர்கட்குப் பயன் தரும் செயல்கள் என்செய்தீர்கள் . நாணிலீர் - வெட்கம் இல்லாதவர்களே . சுடலை - இடுகாடு . சேர்வது - அடைவது , சொல் பிரமாணம் - சத்தப்பிரமாணத்தாலறிவதொன்றேயன்றி காட்சி அநுபவத்தாலும் அறிவதாம் . உடலினார் - உடல் . இழித்தற் பொருளில் வந்தது ஆர் விகுதி . ஊர்முனிபண்டம் - பிணம் என்று பேரிட்டு ஊர் மக்களால் வெறுக்கப்படும் பொருளாகும் . கைவிட்டால் - காத்தலை நீங்கினால் .


பாடல் எண் : 5

பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கிலார்
ஆக்கைக் கேயிரை தேடி யலமந்து
காக்கை கேயிரை யாகிக் கழிவரே.


பொழிப்புரை :
 பூக்களைக் கையிற்கொண்டு சிவபிரானின் பொன்னார் திருவடிகளைப் போற்றுதலில்லாதவர்களும் , நாவினைக் கொண்டு இறைவன் திருநாமத்தை நவிலாதவர்களும் தத்தம் உடலுக்கே உணவுதேடிச் சுழன்று இறுதியில் காக்கைக்கே தாம் இரையாகி ஒழிவர் .

குறிப்புரை :
 பூக்கைக்கொண்டு என்க . பொன்னடி - பொன்னைப் போலப் பொதிதற்குரிய திருவடி . நாக்கைக்கொண்டு - நாவைக் கொண்டு என்க . நாமம் - இறைவன் திருப்பெயர் . நவில்கிலார் - கூறாதவர்கள் . ஆக்கைக்கே - உடலுக்கே . இரை - உணவு . அலமந்து - வருந்தி . காக்கைக்கு - காகங்களுக்கே . இரையாகி - உணவாகி . கழிவர் - அழிந்தொழிவர் .


பாடல் எண் : 6
 குறிக ளும்மடை யாளமுங் கோயிலும்
 நெறிக ளும்மவர் நின்றதோர் நேர்மையும்
 அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும்
 பொறியீ லீர்மன மென்கொல் புகாததே.


பொழிப்புரை :
 விதியற்றவர்களே ! குறிகளும் , அடையாளமும் , கோயிலும் , நெறிகளும் , அவ்விறைவர் நின்றதோர் நேர்மையும் அறிய ஆயிரம் வேதங்கள் கூறினும் உம் மனம் அவற்றுட் புகாதது என்னையோ ?

பாடல் எண் : 7
 வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
 தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனைச்
 சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
 வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே.


பொழிப்புரை :
 தன்னை வாழ்த்துதற்கு வாயும் , தன்னை நினைக்க அறிவற்ற நெஞ்சும் , தன்னை வணங்கத் தலையும் தந்த தலைவனாகிய பெருமானை வண்டுகள் சூழ்ந்த மலர்களைத் தூவித்துதிக்காமல் , வினையேன் நெடுங்காலம் வீழ்த்தியவாறு என்னே ?.

குறிப்புரை :
 மடநெஞ்சு - அறியாமையின் பாற்பட்ட மனம் . தாழ்த்த - வணங்க . சென்னி - தலை . சூழ்த்த மாமலர் - ஆராய்ந்து எடுத்த சிறந்த மலர் . சூழ்ந்த - சூழ்த்த வலித்தல் விகாரம் . துதியாதே - போற்றி வணங்காமல் . வினையேன் - தீவினையேனாகிய நான் . நெடுங்காலம் - பலகாலம் . வீழ்த்தவா - கழித்தேன் . ஆ அது வருந்தத் தக்கது .

பாடல் எண் : 8
 எழுது பாவைநல் லார்திறம் விட்டுநான்
 தொழுது போற்றிநின் றேனையுஞ் சூழ்ந்துகொண்
உழுத சால்வழி யேயுழு வான்பொருட்
 இழுதை நெஞ்சமி தென்படு கின்றதே.


பொழிப்புரை :
 எழுதிய பாவைச் சித்திரம் போன்ற அழகுடைய பெண்கள் திறத்தின் நீங்கி நான்தொழுது போற்றி நிற்க . என்னையும் ஆராய்ந்து கொண்டு உழுத சால் வழியே பின்னும் உழுவதன் பொருட்டு மிக்க இழிவுடைய நெஞ்சம் செய்கின்றது தானா என்னை ?.

பாடல் எண் : 9
  நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே
 புக்கு நிற்கும் பொன்னார்சடைப் புண்ணியன்
 பொக்க மிக்கவர் பூவுநீ ருங்கண்டு
 நக்கு நிற்பர் அவர்தம்மை நாணியே.


பொழிப்புரை :
 நெகிழ்ந்து நெகிழ்ந்து நினைபவர் நெஞ்சுளே புகுந்து நிற்கும் பொன்னார் சடைப் புண்ணியன் , பொய்ம்மையாளர் பூசையிற் பூவையும் நீரையும் கண்டு அவர் தம்மை நாணிச் சிரித்து நிற்பன் .


குறிப்புரை :
நெக்கு நெக்கு - மனம் நெகிழ்ந்து நெகிழ்ந்து . உருகி உருகி என்க . நெஞ்சுள் - மனத்தினுள்ளே . புக்கு நிற்கும் - புகுந்து எழுந்தருளியிருக்கின்ற . பொன்னார்சடை - அழகு பொருந்திய சடை , பொக்கம் - பொய் . அவர்தம்மை - அவரை நாணி - வெட்கமடைந்து . நக்குநிற்பர் - ஏளனநகை புரிந்திருப்பர் .

பாடல் எண் : 10
 விறகிற் றீயினன் பாலிற் படுநெய்போல்
 மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
 உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினால்
 முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே.


பொழிப்புரை :
 விறகில் தீப்போலவும் . பாலிற்பொருந்திய நெய்போலவும் , மாமணிச் சோதியானாகிய இறைவன் மறைய நின்றுளன் ; உறவு என்னுங்கோலை நட்டு உணர்வு என்ற கயிற்றினால் முறுகவாங்கிக் கடைந்தால் முன்னின்று அருள் வழங்குவான் .

குறிப்புரை :
 விறகில் தீயின் - விறகின்கண் மறைந்திருக்கும் நெருப்பைப் போல . நன்பாலில்படு - நல்ல பாலில் மறைந்திருந்து பின்னர்த் தோன்றும் . மாமணிச் சோதியான் - சிறந்த மணியின் கண் ஒளி மறைந்திருந்து சாணை பிடித்த பின்னர் வெளிப்படல் போல உள்ளத்துள்ளே மறைந்து நிற்பவன் . உறவு - அறிவு , உணர்வு , அன்பு , மாறிக்கூறுவாருமுளர் . அறிவாகிய கயிற்றினாலே . முறுகவாங்கிக் கடைய - நன்றாக இழுத்துக்கடைய . முன்னிற்கும் - நம்முன் தோன்றி அருளுவான் . விறகு . பால் , மணி இவற்றுள் மறைந்து நிற்கும் தீ முதலானவற்றை முறையே முறுகக் கடைதல் , வாங்கிக் கடைதல் , கடைதல் என்பனவற்றால் வெளிப்படுத்தலாம் . அதுபோலப் பக்குவம் இல்லாதோர் பக்குவான்மா இவர்களுக்குக் கடவுள் தோன்றியருளும் வழி கூறப்பட்டது . கயிற்றினால் வாங்கிக் கடைதல் முன் இரண்டற்கும் பொது .

நன்றி: 
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=5&Song_idField=5090 
நன்றி: http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=5&Song_idField=5090

43 comments:

  1. திருச்சிற்றம்பலம்

    ReplyDelete
  2. சிவாயநம திருச்சிற்றம்பலம்

    ReplyDelete
  3. சொற்பதம் பிறித்து சுலபமாக படிக்க பதியவும்

    ReplyDelete
  4. மிகவும் அருமை....வாழ்த்துக்கள்
    தங்கள் இறை பணி, தமிழ் பணி சிறக்கட்டும்

    ReplyDelete
  5. ஓம் நமசிவாய வாழ்க வாழ்க

    ReplyDelete
  6. Om namah shivaya 🙏

    ReplyDelete
  7. 😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇

    ReplyDelete
  8. திருச்சிற்றம்பலம்.அடியேனின் சிரம் தாழ்ந்த வணக்கம்.

    ReplyDelete
  9. lLove you 🥰🥰🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🧡🧡💝💖💗💓💞💕💝💖💗💓💞💕♥️💌💕💘🤍🤎💙💚💜😻😻❤️❤️🤍💞💕

    ReplyDelete
  10. ஓம் நமச் சிவாய
    சிவாய நம ஓம்

    ReplyDelete
  11. ஓம் நமசிவாய

    ReplyDelete
  12. உரை மிக்க சுவையாக உள்ளது.

    ReplyDelete
  13. எட்டாம் பாடலுக்கு விளக்கம் தவறு போல தெரிகின்றது.

    ஏழாம் பாடலுக்கும் ஒன்பதாம் பாடலுக்கும் விளக்கத் தொடர்ச்சி ஒத்துப்போகுது. ஆனால் இடைப்பட்ட எட்டாம் பாடல் விளக்கம் தொடர்ச்சியே இல்லாத விளக்கமாக இருக்கின்றது.

    ReplyDelete
  14. மிக அருமை யான உரை
    மிக அருமை யான தெளிவு

    ReplyDelete
  15. போற்றி ஓம் நமசிவாய.நாவுக்கரசப் பெருமானைப் போலவே நாம் அணைவரும் எத்தகைய துன்பம் வரினும் சிவபெருமான் திருவடிகளை உறுதியுடன் பற்றி நிற்போம்.திருச்சிற்றம்பலம்.

    ReplyDelete
  16. ஓம் நமசிவாய வாழ்க.....

    ReplyDelete
  17. தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  18. அருமையான விளக்கத்துடன் தரப்பட்டுள்ளது. இதில் பாடல் 8 - உழுது சால் வழியே உழுவான் பொருட்டு - இன்னும் எளிய பொருள் விளக்கம் தரையிலுமானால் நன்று. ஓம் நாமசிவாய 🙏

    ReplyDelete
  19. நற்றுணையாவது நமச்சிவாயவே ஸ்ரீவில்லிபுத்தூர்

    ReplyDelete
  20. சிவாய நம 🙏🏼🙏🏼🙏🏼

    ReplyDelete
  21. வணக்கம் அய்யா, மெய் மறந்து போனேன். மிக்க நன்றிகள் இறைவா

    ReplyDelete
  22. மிக்க நன்றிகள் பல

    ReplyDelete
  23. ❤️❤️❤️

    ReplyDelete
  24. Om namashivaya🔱🔱🔱

    ReplyDelete
  25. மிக்க நன்றி ஜயா

    ReplyDelete
  26. I love you ma....
    Thank you ma....
    Great job ma....
    Well done my dear...

    ReplyDelete
  27. Om nama shivaya...
    Mava shiva
    Nasi masi vasi vasi...

    ReplyDelete
  28. மிகவும் நன்றாக இருக்கிறது

    ReplyDelete
  29. திருச்சிற்றம்பலம்
    10 பாடல்களும் அருமை 👍

    ReplyDelete

தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.. :)

விருப்பம் :)