திருநாவுக்கரசர் தேவாரம்
ஆறாம் திருமுறை 92 திருக்கழுக்குன்றம்
பாடல் எண் : 1
மூவிலைவேற் கையானை மூர்த்தி தன்னை
முதுபிணக்கா டுடையானை முதலா னானை
ஆவினிலைந் துகந்தானை அமரர் கோனை
ஆலால முண்டுகந்த ஐயன் தன்னைப்
பூவினின்மேல் நான்முகனும் மாலும் போற்றப்
புணர்வரிய பெருமானைப் புனிதன் தன்னைக்
காவலனைக் கழுக்குன்றம் அமர்ந்தான் தன்னைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.
பொழிப்புரை :
மூவிலை வேலாகிய சூலத்தைப் பிடித்த கையினனும், அழகிய கடவுளும், பிணமுதுகாட்டை உடையவனும், எல்லாவற்றிற்கும் அடியானவனும், தேவர்களுடைய அரசனும், ஆல கால விடத்தை மகிழ்ந்துண்ட தலைவனும், தாமரைமேல் வீற்றிருக்கும் நான்முகனும் திருமாலும் வணங்குதற்கு நெருங்க முடியாத பெருமானும், புனிதனும், எல்லாவற்றையும் காப்பவனும், கழுக்குன்றில் அமர்ந்தவனும் ஆகிய கற்பகத்தை நான் கண்ணாரக்கண்டேன்.
பாடல் எண் : 2
பல்லாடு தலைசடைமே லுடையான் தன்னைப்
பாய்புலித்தோ லுடையானைப் பகவன் தன்னைச்
சொல்லோடு பொருளனைத்து மானான் தன்னைச்
சுடருருவில் என்பறாக் கோலத் தானை
அல்லாத காலனைமுன் னடர்த்தான் தன்னை
ஆலின்கீழ் இருந்தானை அமுதா னானைக்
கல்லாடை புனைந்தருளுங் காபா லியைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.
பொழிப்புரை :
பற்கள் வெளியே தோன்றுகின்ற வெண் தலையைச் சடைமேல் தரித்தவனும், பாயும் புலியை உரித்துக்கொண்ட தோலாகிய உடையினனும், சிறந்த ஆறு குணங்களை உடையவனும், சொற்களும் பொருள்கள் எல்லாமும் ஆனவனும், என்புஅணி நீங்கப்பெறாத தோற்றத்துடன் ஒளிவிட்டுத் திகழ்பவனும், முறை யல்லாத செயலை மேற்கொண்ட காலனை முன் ஒறுத்தவனும், ஆலின் கீழ் இருந்தவனும், அமுதமானவனும், கல்லாடை புனைந்தருளும் காபாலியும் ஆகிய கற்பகத்தை நான் கண்ணாரக் கண்டேன்.
நன்றி: தேவாரம்.ஆர்க்
No comments:
Post a Comment
தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.. :)