Monday, April 27, 2026

நான் யார்? - ஸ்ரீ ரமண பகவான் அருண்மொழி (எளிய தமிழ் வடிவில்)

நான் யார்?


ஸ்ரீ ரமண பகவான் அருள்மொழி


(வினா-விடை வடிவம்)


ஓம் நமோ பகவதே ஸ்ரீ அருணாசல ரமணாய

முன்னுரை


பூமியின் இதயமும் நினைக்க முக்தி தரவல்லதுமான ஸ்ரீ அருணாசலத்தில் விரூபாக்ஷ குகையில் பகவான் ஸ்ரீ ரமண மஹர்ஷிகளது அருந்தவ மோனத்தால் அவர்பால் ஈர்க்கப்பெற்ற பக்தர்கள் பலருள் ஒருவரான சிவப்பிரகாசம் பிள்ளை என்னும் அன்பர் 1901, 1902-ல் மஹரிஷிகளை அணுகி, உண்மையை உணர்ந்தபடி தமக்குபதேசிக்கும்படி வினயத்துடன் வேண்டிக் கேட்ட வினாக்கட்கு, மஹர்ஷிகள் அவ்வப்போது தமிழில் விடை எழுதித் தந்த இந்நூல் பதிப்பிக்கப்பெற்று வெளியிடப்படுகின்றது.


நான் யார்?


எல்லா உயிர்களும் துன்பமின்றி, எப்போதும் இன்பமாக இருக்க விரும்புவதாலும், அனைவருக்கும் தன்னிடத்திலேயே உன்னத அன்பு காணப்படுவதாலும், அன்பிற்கு இன்பமே காரணமாக இருப்பதாலும், ஒருவரின் இயல்பாகவும், மனம் இல்லாத ஆழ்ந்த உறக்க நிலையில் அனுபவிக்கப்படும் அந்த இன்பத்தைப் அடைவதற்காகவும், தன்னை தான் அறிந்துகொள்ள வேண்டும். அதற்கு நான் யார் என்னும் அறிவுத் தேடலே (ஞான விசாரமே) முக்கிய சாதனம்.



1. நான் யார்?


ஏழு தாதுக்களால் ஆன பருவுடல் நான் அல்ல; கேட்டல், தொடுதல், பார்த்தல், சுவைத்தல், நுகர்தல் ஆகிய ஐந்து நுகர்ச்சிகளையும் தனித் தனியே அறிகின்ற  ஒலி, தொடுதல், நிறம், சுவை, மணம் ஆகியவற்றை உணர்வதுமான ஐந்து புலன்களும் நான் அல்ல; பேச்சு, அசைவு, பற்றுதல், கழிவு நீக்கம், இனப்பெருக்கம் ஆகிய ஐந்து தொழில்களையும் செய்கின்ற பேசுதல், அசைதல், பற்றுதல், கழிவு நீக்கம், அனுபவித்தல் ஆகியவற்றைச் செய்வதுமான ஐம்பொறிகள் நான் அல்ல; உள்மூச்சு முதலான ஐந்து பணிகளைச் செய்யும் பிராண முதலான ஐந்து வாயுக்கள் நான் அல்ல; நினைக்கின்ற மனம்கூட நான் அல்ல; எல்லா நுகரச்சிகளும் எல்லா தொழில்களும் அற்று நுகரச்சிப் பதிவுகள் மட்டும் பொருந்தியிருக்கும் அறியாமையும் நான் அன்று.



2. இவையெல்லாம் நான் அல்லாவிடில் பின்னர் நான் யார்?


மேற்சொல்லிய யாவும் நானல்ல என்று 'இதுவல்ல', 'இதுவல்ல' (நேதி) எனச் செய்து தனித்து நிற்கும் அறிவே நான்.



3. அறிவின் இயல்பு (சொரூபம்) என்ன?


அறவின் இயல்பு என்பது உண்மை இருப்பு (சத்), அறிவு உணர்வு (சித்)- பேரின்பம் (ஆனந்தம்) ஆகும்.



4. உண்மை அறிவின் விளக்கம் எப்போது கிடைக்கும்?


காணப்படுவதாகிய உலகம் அகற்றப்படும்போது, காண்பவனாகிய அறிவின் உண்மை விளக்கக் காட்சி உண்டாகும்.



5. உலகம் உள்ளபோதே உண்மை அறிவின் விளக்கம் உண்டாகாதா?


உண்டாகாது.



6. ஏன்?


காண்பவனும் காணப்படும் பொருளும் கயிறும் பாம்பும் போன்றவைகள். பொய்யாய்க் கற்பித்துக்கொண்டுள்ள பாம்பைப் பற்றிய அறிவு போனால் ஒழிய உண்மையான கயிற்றைப் பற்றிய அறிவு தோன்றாதது போல,  பொய்யாய்க் கற்பித்துக்கொண்டுள்ள உலகத்தின் காட்சி நீங்கினாலொழிய உண்மையான அறிவின் இயல்பு விளக்கம் உண்டாகாது.



7. காணப்படும் பொருளாகிய உலகம் எப்போது நீங்கும்?


அனைத்து அறிவிற்கும் (நுகர்ச்சிகளுக்கும்) அனைத்து தொழில்களுக்கும் காரணமான மனம் அடங்கினால் உலகம் மறைந்துவிடும்.



8. மனதின் இயல்பு என்ன?


மனம் என்பது ஆத்ம அறிவிலுள்ள ஓர் அற்புத சக்தியாகும். அது எல்லா நினைவுகளையும் தோற்றுவிக்கின்றது. நினைவுகளை எல்லாம் நீக்கிப் பார்க்கின்றபோது தனியாய் மனம் என்று ஓர் பொருளில்லை; ஆகையால் நினைவே மனதின் இயல்பு வடிவம்.

நினைவுகளைத் தவிர்த்து உலகம் என்று ஓர் பொருள் அன்னியமாய் இல்லை; தூக்கத்தில் நினைவுகள் இல்லை, உலகமுமில்லை; விழிப்பு மற்றும் கனவு நிலைகளில் நினைவுகள் உள்ளன, உலகமும் உண்டு. சிலந்திப் பூச்சி எப்படித் தன்னிடமிருந்து, வெளியில் நூலைநூற்று மறுபடியும் தன்னுள் இழுத்துக் கொள்ளுகிறதோ, அப்படியே மனமும் தன்னிடத்திலிருந்து உலகத்தைத் தோற்றுவித்து மறுபடியும் தன்னிடமே ஒடுக்கிக் கொள்ளுகிறது.


மனம் ஆத்ம அறிவிலிருந்து வெளிப்படும்போது உலகம் தோன்றும். ஆகையால், உலகம் தோன்றும்போது அறிவு தோன்றாது; அறிவு தோன்றும் (பிரகாசிக்கும்) போது உலகம் தோன்றாது; மனதின் இயல்பு நிலையை விசாரித்துக் கொண்டே போனால் மனம் தானாய் முடியும். தான் என்பது ஆத்ம அறிவே. மனம் எப்போதும் ஒரு பருப்பொருளை அனுசரித்தே நிற்கும்; தனியாய் நிற்காது. மனமே நுண்ணிய உடல் (சூஷ்ம சரீரம்) என்றும் உயிர் (ஜீவன்) என்றும் சொல்லப்படுகிறது.



9. மனதின் இயல்பைத் தேடி (விசாரித்து) அறியும் வழி என்ன ?


இந்த உடலில் நான் என்று கிளம்புவது எதுவோ அதுவே மனமாம். நான் என்கிற நினைவு உடலில் முதலில் எந்த இடத்தில் தோன்றுகிறது என்று விசாரித்தால், இதயத்தில் என்று தெரிய வரும். அதுவே மனதின் பிறப்பிடம். ‘நான், நான்’ என்று கருதிக் கொண்டிருந்தாலும் கூட  அவ்விடத்திற்கு கொண்டுபோய் விட்டுவிடும். மனதில் தோன்றும் நினைவுகள் எல்லாவற்றிற்கும் நான் என்னும் நினைவே முதல் நினைவு. இது எழுந்த பிறகே ஏனைய நினைவுகள் எழுகின்றன. தன்மை தோன்றிய பிறகே, முன்னிலை, படர்க்கைகள் தோன்றுகின்றன; தன்மை இன்றி முன்னிலை படர்க்கைகள் இருக்கா.



10.  மனம் எப்படி அடங்கும்?


'நான் யார்' என்னும் தேடலினாலேயே (விசாரத்தினாலேயே) மனம் அடங்கும்; 'நான் யார்' என்னும் நினைவு மற்ற நினைவுகளை எல்லாம் அழித்து பிணஞ்சுடும் தடிபோல் முடிவில் தானும் அழியும். பிறகு அறிவின் விளக்கக் காட்சி உண்டாகும்.



11.  'நான் யார்' என்கிற நினைவை எக்காலமும் பிடிக்கும் உபாயம் என்ன?


பிற எண்ணங்கள் எழுந்தால் அவற்றைப் பூர்த்தி பண்ணுவதற்கு எத்தனியாமல் அவை “யாருக்கு உண்டாயின”? என்று விசாரிக்க வேண்டும். எத்தனை எண்ணங்கள் எழினும் என்ன? விழிப்புணர்வாய் ஒவ்வோர் எண்ணமும் கிளம்பும்போதே “இது யாருக்கு உண்டாயிற்று?” என்று விசாரித்தால் “எனக்கு” என்று தோன்றும். “நான் யார்” என்று விசாரித்தால் மனம் தன் பிறப்பிடத்திற்குத் திரும்பிவிடும்; எழுந்த எண்ணம் அடங்கி விடும். இப்படிப் பழகப் பழக மனதிற்குத் தன் பிறப்பிடத்தில் தங்கி நிற்கும் சக்தி அதிகரிக்கின்றது. நுண்ணிய (சூஷ்மமான) மனம், மூளை இந்திரியங்கள் வாயிலாய் வெளிப்படும்போது ஸ்தூலமான பெயர் மற்றும் உருவங்கள் (நாம ரூபங்கள்) தோன்றுகின்றன; இதயத்தில் தங்கும்போது பெயர் மற்றும் உருவங்கள் மறைகின்றன. மனத்தை வெளிவிடாமல் இதயத்தில் வைத்துக் கொண்டிருப்பதற்குத்தான் அகமுகம் அல்லது உள்முகம் என்று பெயர். இதயத்திலிருந்து வெளியிடுவதற்குத்தான் வெளிமுக மென்று பெயர். இவ்விதமாக மனம் இதயத்தில் தங்கவே, எல்லா நினைவுகளுக்கும் மூலமான ‘நான்’ என்பது போய், எப்பொழுதுமுள்ள ‘தான்’ மட்டும் விளங்கும். எதைச் செய்தாலும் நான் என்கிற அகங்காரமற்றுச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் எல்லாம் சிவ உருவாய்த் தோன்றும்.



12. மனம் அடங்குவதற்கு வேறு வழிகள் இல்லையா?


 அறிவுத் தேடலைத் (விசாரணையைத்) தவிர வேறு தகுந்த வழிகளில்லை. மற்ற உபாயங்களினால் அடக்கினால், மனம் அடங்கினது போலிருந்து மறுபடியும் கிளம்பிவிடும். பிராணாயாமத்தாலும் மனம் அடங்கும்; ஆனால் பிராணன் அடங்கியிருக்கும் வரையில் மனமும் அடங்கியிருந்து, பிராணன் வெளிப்படும்போது தானும் வெளிப்பட்டு நினைவுகள் (வாசனை) வசத்தால் அலையும். மனத்திற்கும் பிராணனுக்கும் பிறப்பிடம் ஒன்றே. நினைவே மனதின் இயல்பு நிலை; நான் என்னும் நினைவே மனதின் முதல் நினைவு; அதுவே அகங்காரம். அகங்காரம் எங்கிருந்து உற்பத்தியோ, அங்கிருந்துதான் மூச்சும் கிளம்புகின்றது, ஆகையால் மனம் அடங்கும்போது பிராணனும், பிராணன் அடங்கும்போது மனமும் அடங்கும். ஆனால் ஆழ்ந்த உறக்கத்தில் (சுழுத்தியில்) மனம் அடங்கியிருந்த போதிலும் பிராணன் அடங்கவில்லை. உடலின் பாதுகாப்பின் நிமித்தமும், உடலானது மரித்து விட்டதோ என்று பிறர் ஐயமுறாவண்ணமும் இவ்வாறு ஈச்வர நியதியால் ஏற்பட்டிருக்கிறது. விழிப்பு நிலையிலும் சமாதியிலும் மனம் அடங்குகிறபோது பிராணன் அடங்குகிறது. பிராணன் மனதின் ஸ்தூல நிலை (ரூபம்) எனப்படும். மரணகாலம் வரையில் மனம் பிராணனை உடலில் வைத்துக் கொண்டிருந்து, உடல் மரிக்கும் காலத்தில் அதனைக் கவர்ந்து கொண்டு போகின்றது. ஆகையால் பிராணாயாமம் மனத்தை அடக்க உதவி ஆகுமே அன்றி மன அழிவைச் செய்யாது.


பிரணாயாமம் போலவே  உருவ வழிபாடு (மூர்த்தி தியானம்), மந்திர ஜபம், உணவுக் கட்டுப்பாடு (ஆகார நியம) என்பவைகளும் மனத்தை அடக்கும் உதவிகளே.


உருவ வழிபாட்டினாலும், மந்திர ஜபத்தாலும் மனம் ஒருமைப்பாட்டை அடைகிறது. மனமானது எப்போதும் சலித்துக் கொண்டே இருக்கும். யானையின் துதிக்கையில் ஒரு சங்கிலியைக் கொடுத்தால் அது எப்படி வேறொன்றையும் பற்றாமல் அதையே பற்றிக் கொண்டு செல்லுமோ, அப்படியே மனதையும் ஏதோ ஒரு பெயர் (நாமம்) அல்லது உருவத்தில் (ரூபத்தில்) பழக்கினால் அதையே பற்றிக் கொண்டிருக்கும். மனம் அளவிறந்த நினைவுகளாய் விரிகின்ற படியால் ஒவ்வொரு நினைவும் மிக பலவீனமாகப் போகின்றது. நினைவுகள் அடங்க அடங்க ஒருமைத் தன்மை யடைந்து, அதனால் பலத்தை யடைந்த மனத்திற்கு ஆத்ம விசாரம் சுலபமாய் வாய்க்கும் (சித்திக்கும்). எல்லா நியமங்களினும் சிறந்த மித தூய்மையான உணவு (சாத்வீக ஆகாரம்) நியமத்தால் மனத்தின் சத்வ குணம் விருத்தியாகி ஆத்ம விசாரத்திற்கு உதவி உண்டாகிறது.



13.  நுகர்ச்சி நினைவுகள் (வாசனைகள்) அளவற்றனவாய்க் கடலில் அலை போலத் தோன்றுகின்றனவே; அவைகளெல்லாம் எப்போது நீங்கும்?


அறிவின் விளக்கத் தியானம் கிளம்பக் கிளம்ப நினைவுகள் எல்லாம் அழிந்துவிடும்.



14. தொன்று தொட்டு வருகின்ற எல்லா நுகர்ச்சி நினைவுகளும் (வாசனைகளும்) ஒடுங்கி, உண்மை அறிவாக மட்டுமே இருக்க முடியுமா?


“முடியுமா, முடியாதா?”  என்கிற சந்தேக நினைவுக்கும் இடம் கொடுக்காமல், உண்மை அறிவின் தியானத்தை விடாப் பிடியாய்ப் பிடிக்க வேண்டும். ஒருவன் எவ்வளவு பாவியாய் இருந்தாலும், “நான் பாவியாய் இருக்கிறேனே! எப்படிக் கடைத்தேறப் போகிறேன்?’ என்று ஏங்கி அழுது கொண்டு இருக்காமல், தான் பாவி என்னும் எண்ணத்தையும் அறவே ஒழித்து உண்மை அறிவின் தியானத்தில் ஊக்கமுள்ளவனாக இருந்தால் அவன் நிச்சயமாக உருப்படுவான். நல்ல மனம் என்றும் கெட்ட மனம் என்றும் இரண்டு மனங்கள் இல்லை; மனம் ஒன்றே. நினைவுகளே (வாசனைகளே) நல்லவை (சுபம்) என்றும், கெட்டவை (அசுபம்) என்றும் இரண்டு விதம். மனம் நல்ல நினைவு வயத்தாய் நிற்கும்போது நல்ல மனமெ என்றும், கெட்ட நினைவு வயத்தாய் நிற்கும் போது கெட்ட மனம் என்றும் சொல்லப்படும்.


உலக (பிரபஞ்ச) விஷயங்களிலும்  பிறர் காரியங்களிலும் மனதை விடக்கூடாது. பிறர் எவ்வளவு கெட்டவர்களாய் இருந்தாலும், அவர்களிடத்தில் வெறுப்பு வைக்கலாகாது. விருப்பு, வெறுப்பு இரண்டும் வெறுக்கத் தக்கன. பிறருக்கு ஒருவன் கொடுப்பது எல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்ளுகிறான். இவ்வுண்மையை அறிந்தால் எவன்தான் கொடுக்காது  ஒழிவான்? தான் எழுந்தால் அனைத்தும் எழும்; தான் அடங்கினால் அனைத்தும் அடங்கும். எவ்வளவுக்கு எவ்வளவு தாழ்ந்து நடக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நன்மை உண்டு. மனத்தை அடக்கிக் கொண்டிருந்தால் எங்கே இருந்தாலும் இருக்கலாம்.



15. அறிவுத் தேடல் (விசாரணை) எதுவரையில் வேண்டும்?


மனத்தின்கண் எதுவரையில் நுகர்ச்சி நினைவுகள் இருக்கின்றனவோ, அதுவரையில் நான் யார் என்னும் அறிவுத் தேடலும் (விசாரணையும்) வேண்டும். நினைவுகள் தோன்றத் தோன்ற அப்போதைக்கு அப்போதே அவற்றை எல்லாம் உற்பத்தி ஸ்தானத்திலேயே விசாரணையால் நசிப்பிக்க வேண்டும். ஒருவன் அறிவு விளக்கத்தை அடையும் வரையில் நிரந்தரமாக உண்மை அறிவு பற்றிய தியானத்தைக் கைப்பற்றுவானாயின், அது ஒன்றே போதும். கோட்டைக்குள் எதிரிகள் உள்ள வரையில் அதிலிருந்து வெளியே வந்துகொண்டு இருப்பார்கள்; வர வர அவர்களை எல்லாம் வெட்டிக் கொண்டே இருந்தால் கோட்டை கைவசப்படும்.



16. ஆத்ம சொரூபத்தின் இயல்பு என்ன?


உண்மையாக உள்ளது ஆத்ம சொரூபம் ஒன்றே. உலகங்கள், உயிர்கள், கடவுளர்கள் (ஜக, ஜீவ, ஈச்வரர்கள்) சிப்பியில் வெள்ளிபோல் அதில் கற்பனைகள்; இவை மூன்றும் ஏக காலத்தில் தோன்றி, ஏக காலத்தில் மறைகின்றன.


நான் என்கிற நினைவு துளியளவும் இல்லாத இடமே ஆத்ம சொரூபமாகும். அதுவே மெளனம் எனப்படும். ஆத்ம சொரூபமே உலகம்; சொரூபமே நான்; சொரூபமே கடவுள்; எல்லாம் சிவ சொரூபமே.



17. எல்லாம் ஈசன் செயல் அன்றோ ?


விருப்பத் தீர்மான முயற்சி (இச்சா ஸங்கல்ப யத்தனம்) இன்றி எழுந்த சூரியன் இருப்பின் மாத்திரத்தில் காந்தக்கல் நெருப்பைக் கக்குவதும், தாமரை மலர்வதும், நீர் வற்றுவதும், உலகோர் தத்தம் காரியங்களில் ஈடுபட்டு இயற்றி அடங்குவதும், காந்தத்தின் முன் ஊசி இயங்குவதும் போல, ஈசன் இருப்பின்  சிறப்பு மாத்திரத்தால் நடக்கும் முத்தொழில் அல்லது ஐந்தொழில்களுக்கு உட்பட்ட ஜீவர்கள் தத்தம் வினைகளின் தொடர்பால் இயங்கி அடங்குகின்றனர். அன்றி, அவர் (ஈசன்) விருப்பு வெறுப்புகளை உடையவர் அல்லர்; ஒரு செயலும் (கருமமும்) அவரை ஒட்டாது. அது, உலக செயல்கள் சூரியனை ஒட்டாததும், ஏனைய நான்கு பூதங்களின் (நிலம், நீர், காற்று, நெருப்பு) குணா குணங்கள் பரந்து விரிந்த ஆகாயத்தை  ஒட்டாததும் போலும் ஆகும்.



18. பக்தருள் மேலான பக்தர் யார்?


எவன் தன்னையே, கடவுளாகிய சொரூபத்தினிடத்தில் தியாகம் செய்கிறானோ அவனே சிறந்த பக்திமான். ஆத்ம சிந்தனையைத் தவிர வேறு சிந்தனை கிளம்புவதற்குச் சற்றும் இடங்கொடுக்காமல் ஆத்ம நினைவை மட்டும் உடையவனாக இருப்பதே தன்னை ஈசனுக்கு அளிப்பதாகும்.


ஈசன்பேரில் எவ்வளவு பாரத்தைப் போட்டாலும், அவ்வளவையும் அவர் வகித்துக் கொள்ளுகிறார். சகல காரியங்களையும் ஒரு பரமேச்வர சக்தி நடத்திக் கொண்டிருக்கிறபடியால், நாமும் அதற்கு அடங்கி இருக்காமல், “இப்படிச் செய்ய வேண்டும் அப்படிச் செய்ய வேண்டும் என்று எப்போதும் சிந்திப்பது ஏன்? புகை வண்டி சகல பாரங்களையும் தாங்கிக் கொண்டு போவது தெரிந்திருந்தும் அதில் ஏறிக் கொண்டு போகும் நாம் நம்முடைய சிறிய மூட்டையையும் அதில் போட்டுவிட்டுச் சுகமா யிருக்காமல், அதை நமது தலையில் தங்கிக் கொண்டு ஏன் கஷ்டப்பட வேண்டும்?



19. வைராக்கியமாவது எது?


எந்த எந்த நினைவுகள் உற்பத்தியாகின்றனவோ அவற்றையெல்லாம் ஒன்று கூட விடாமல் உற்பத்தி இடத்திலேயே நசுக்கிப் போடுவதே வைராக்கியமாம். முத்துக் குளிப்போர் தம் இடையில் கல்லைக் கட்டிக் கொண்டு மூழ்கிக் கடலடியில் கிடைக்கும் முத்தை எப்படி எடுக்கிறார்களோ, அப்படியே ஒவ்வொருவனும் வைராக்கியத்துடன் தன்னுள் ஆழ்ந்து மூழ்கி ஆத்ம முத்தையடையலாம்.



20. கடவுளாலும் குருவாலும் ஒரு ஜீவனை முக்தனாக்க முடியாதா?


கடவுளும் குருவும் முக்தியை அடைவதற்கு வழியைக் காட்டுவார்களே அல்லாமல், தாமாகவே ஜீவர்களை முக்தியில் சேர்க்க மாட்டார்.


கடவுளும் குருவும் உண்மையில் வேறல்லர். புலி வாயில் பட்டது எவ்வாறு திரும்பாதோ, அவ்வாறே குருவின் அருட் பார்வையில் பட்டவர்கள் அவரால் ரக்ஷிக்கப்படுவரே அன்றி ஒருக்காலும் கைவிடப்படார்; எனினும், ஒவ்வொருவரும் தம்முடைய முயற்சியினாலேயே கடவுள் அல்லது குரு காட்டிய வழிப்படி தவறாது நடந்து முக்தி அடைய வேண்டும். தன்னைத் தன்னுடைய அறிவுக் (ஞானக்) கண்ணால், தானே அறியவேண்டுமே அல்லாமல், பிறரால் எப்படி அறியலாம்? ராமன் என்பவன் தன்னை ராமன் என்று அறிவதற்குக் கண்ணாடி வேண்டுமோ?



21. முக்தியில் விருப்ப முள்ளவனுக்குத் தத்துவங்களின் விசாரணை அவசியமா?


குப்பையைக் கூட்டித் தள்ள வேண்டிய ஒருவன் அதை ஆராய்வதால் எப்படிப் பயனில்லையோ, அப்படியே தன்னை அறிய வேண்டிய ஒருவன், தன்னை மறைத்துக் கொண்டிருக்கும் தத்துவங்கள் அனைத்தையும் சேர்த்துத் தள்ளிவிடாமல் அவை இத்தனை என்று கணக்கிடுவதாலும், அவற்றின் குணங்களை ஆராய்வதாலும் பயனில்லை. உலகத்தை (பிரபஞ்சத்தை) ஒரு கனவைப் (சொப்பனத்தைப்) போல எண்ணிக் கொள்ள வேண்டும்.



22. நனவிற்கும், கனவிற்கும் பேதமில்லையா?


நனவு (விழிப்பு) நீண்டது, கனவு (சொப்பனம்) சுருக்கமானது, என்பது தவிர வேறு பேதம் இல்லை. நனவில் நடக்கும் விவகாரங்கள்  எல்லாம் எவ்வளவு உண்மையாகத் தோன்றுகின்றனவோ, அவ்வளவு உண்மையாகவே கனவில் நடக்கும் விவகாரங்களும் அக்காலத்தில் தோன்றுகின்றன. கனவில் மனம் வேறொரு உடலை எடுத்துக் கொள்கிறது. விழிப்பு, கனவு இரண்டிலும், நினைவுகளும் பெயர் உருவங்களும் (நாமரூபங்களும்) ஒரே காலத்தில் நிகழ்கின்றன.



23. ஆத்மத் தேடல் உள்ளவர்களுக்கு (முமுக்ஷ க்களுக்கு) நூல் படிப்பால் பயன் உண்டா ?


எந்நூலிலும் முக்தி அடைவதற்கு மனத்தை அடக்க வேண்டும் என்று சொல்லப்பட்டு உள்ளபடியால், மன ஒடுக்கமே நூல்களின் முடிவான கருத்து என்று அறிந்துகொண்ட பின்பு நூல்களை அளவின்றிப் படிப்பதால் பயனில்லை. மனத்தை அடக்குவதற்குத் தன்னை யாரென்று தன்னுள் தேட (விசாரிக்க) வேண்டுமே அல்லாமல், எப்படி நூல்களில் தேடுவது?


தன்னைத் தன்னுடைய அறிவுக் (ஞானக்) கண்ணால் தானே அறிய வேண்டும். ‘தான்’ என்பது ஐந்து உறைகளுக்குள் (பஞ்ச கோசங்களுக்குள்: உணவு, மூச்சு, மனம், புத்தி, அறியாமை) இருப்பது ; நூல்களோ அவற்றிற்கு வெளியில் இருப்பவை. ஆகையால், பஞ்ச கோசங்களையும் நீக்கித் தேட வேண்டிய தன்னை நூல்களில் தேடுவது வீணே. கற்றவை அனைத்தையும் ஒருகாலத்தில் மறக்க வேண்டிவரும்.



24. சுகமாவது யாது?


சுகம் என்பது ஆத்மாவின் இயல்பு நிலையே; சுகமும் ஆத்ம இயல்பு நிலையும் வேறன்று. பிரபஞ்சப் பொருள் ஒன்றிலும்கூட சுகமென்பது கிடையாது. அவைகளிலிருந்து சுகம் கிடைப்பதாக நாம் நமது பகுத்தறிவின்மையால் நினைக்கின்றோம். மனம் வெளி வரும்போது துக்கத்தை அனுபவிக்கின்றது. உண்மையில் நமது உணர்வுகள் பூர்த்தியாகும் போதெல்லாம் அது தன்னுடைய இயல் இருப்பிடத்திற்குத் திரும்பி ஆத்ம சுகத்தையே அனுபவிக்கிறது. அப்படியே, தூக்கம், மன ஒடுக்கம் (சமாதி), மயக்கக் (மூர்ச்சை) காலங்களிலும், விரும்பிய பொருள் கிடைக்கிறபோதும், வெறுத்த பொருளுக்குக் கேடு உண்டாகிறபோதும், மனம் உள்முகமாகி ஆத்ம சுகத்தையே அனுபவிக்கிறது. இப்படி மனம் ஆத்மாவை விட்டு வெளியே போவதும் உள்ளே திரும்புவதுமாக ஓய்வின்றி அலைகிறது. மரத்தடியில் நிழல் சுகமாக இருக்கிறது. வெளியில் சூரிய வெப்பம் கொடுமையாக இருக்கிறது.  வெளியில் அலையும் ஒருவன் நிழலில் சென்று குளிர்ச்சி அடைகிறான். சிறிது நேரத்திற்குப் பின் வெளிக்கிளம்பி வெப்பத்தின் கொடுமைக்கு ஆற்றாது, மறுபடியும் மரத்தடிக்கு வருகின்றான். இவ்வாறு நிழலில் இருந்து வெயிலில் போவதும், வெயிலில் இருந்து நிழலில் செல்வதுமாக இருக்கின்றான். இப்படிச் செய்கிறவன் பகுத்தறிவு அற்றவன். ஆனால் பகுத்தறிவானவனோ நிழலை விட்டு நீங்க மாட்டான். அப்படியே ஞானியின் மனமும் பிரம்மத்தை (ஆத்மாவை) விட்டு நீங்குவதில்லை. ஆனால் அஞ்ஞானியின் மனமோ உலகத்தில் (பிரபஞ்சத்தில்) உழன்று துக்கப்படுவதும், சிறிது நேரம் பிரம்மத்திற்குத் திரும்பி சுகமடைவதுமாக இருக்கிறது. உலகம் என்பது நினைவே. உலகம் மறையும்போது, அதாவது நினைவற்ற போது, மனம் ஆனந்தத்தை அனுபவிக்கின்றது; உலகம் தோன்றும் போது அது துக்கத்தை அனுபவிக்கின்றது.



25. அறிவு விளக்கம் (ஞானத்ருஷ்டி) என்றால் என்ன?


சும்மா இருப்பதற்கு தான் அறிவு விளக்கம் (ஞானத்ருஷ்டி) என்று பெயர். சும்மா இருப்பதாவது, மனத்தை உண்மை அறிவில் ஒன்றச் செய்வது; அவ்வாறு அன்றி, பிறர் கருத்தறிதல், முக்காலம் உணர்தல், தூர இடத்தில் நடப்பனவற்றை அறிதல் ஆகிய இவைகள் ஞான த்ருஷ்டி ஆகமாட்டா.



26. பற்றின்மைக்கும் (நிராசைக்கும்) அறிவிற்கும் (ஞானத்திற்கும்) சம்பந்தமென்ன?


பற்றின்மையே (நிராசையே) அறிவு. பற்றினைமை வேறு அறிவு வேறு அன்று; உண்மையில் இரண்டும் ஒன்றே. பற்றின்மையே என்பதும் ஒரு பொருளிலும் மனம் செல்லாமலிருப்பது. அறிவு (ஞானம்) என்பதும் ஒரு பொருளும் தோன்றாது இருப்பது. என்றால், அந்நியத்தை நாடாது இருத்தல் வைராக்கியம் அல்லது பற்றின்மை; தன்னை விடாது இருத்தல் அறிவு (ஞானம்).



27. அறிவுத் தேடலுக்கும் (விசாரணைக்கும்) தியானத்திற்கும் பேதமென்ன?


அறிவுத் தேடலாவது (விசாரணையாவது) தன்னிடத்திலேயே மனதை வைத்துக் கொண்டிருப்பது. தியானமாவது தன்னை பிரம்மம் என்றும் மெய் அறிவு இன்பம் (சச்சிதானந்தம்) என்றும் பாவிப்பது.



28. விடுதலை (முக்தி) என்னதென்றால் என்ன?


கட்டுப்பாடுகளில் (பந்தத்தில்) இருக்கும் தான் 'யார்' என்று தேடித் (விசாரித்துத்) தன் இயல்பான உண்மை அறிவு நிலையைத் தெரிந்துகொள்வதே விடுதலை (முக்தி).




ஸ்ரீ ரமணார்ப்பணமஸ்து





நன்றி: https://tamilnation.org/sathyam/east/ramana/ramana#Who_Am_I_-_Nan_Yaar

1 comment:

  1. Nice update and well-presented information. The content is informative and easy to follow, making it useful for readers interested in current topics. Keep sharing such valuable posts regularly.

    ReplyDelete

தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.. :)

விருப்பம் :)