Friday, March 30, 2012

கண்டேன் அவர் திருப்பாதம்! கண்டறி யாதன கண்டேன்!

அப்பர் கண்ட காட்சி 


திருநாவுக்கரசர் தேவாரம் 
திருவையாறு
நான்காம் திருமுறை  பதிகம்: [4:3] 

முன்னுரை: 

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வனில் நான் படித்த ஓர் அற்புதமான அத்தியாயம் 'அப்பர் கண்ட காட்சி'. அதில் உத்தமச் சோழர் ஆகவிருக்கும் சேந்தன் அமுதனார் 'மாதர்ப் பிறைக்கண்ணி யானை..' எனத் தொடங்கும் அப்பரின் ஐயாற்றுப் பதிகத்தை இனிதாய்ப் பாட, செம்பியன் மாதேவியாரும் அவரின் பரிவாரங்களும் அதை மெய் மறந்து கேட்டுவிட்டு, பின் செம்பியன் மாதேவியார் அப்பதிகதுக்குப் பின்வருமாறு விளக்கமளித்தார்..


"அப்பர் சுவாமி பிராயம் முதிர்ந்து உடல் தளர்ச்சியுற்றிருந்த சமயத்தில் கைலையங்கிரிக்குச் சென்று இறைவனைத் தரிசிக்க விரும்பினார். நெடுதூரம் வடதிசை நோக்கிப் பிரயாணம் செய்தார். மேலே நடக்க முடியாமல் களைத்து விழுந்தார். அச்சமயம் ஒரு பெரியவர் அங்கே தோன்றி, "அப்பரே! கைலையைத் தேடி நீ எங்கே செல்கிறீர்? பொன்னி நதிக் கரையிலுள்ள திருவையாற்றுக்குச் செல்லுங்கள்! பூலோக கைலாசம் அதுதான்" என்று அருளிச் செய்து மறைந்தார். அது இறைவன் வாக்கு என்று அறிந்த அப்பர் திரும்பித் திருவையாறு வந்தார். அந்த ஸ்தலத்தை நெருங்கி வந்த போதே அவருடைய உள்ளம் பரவசம் அடைந்தது. பல அடியார்கள் கையில் பூங்குடலையும் கெண்டியில் காவேரி நீரும் ஏந்தி ஐயாறப்பனைத் தரிசிப்பதற்காகச் சென்று கொண்டிருப்பதைப் பார்த்தார். அவர்கள் இறைவனுடைய புகழைப் பாடிக்கொண்டு சென்றார்கள். அவர்கள் பின்னால் அப்பரும் சென்றார். அப்போது திருவையாறு நகர்ப்புறத்தில் ஆணும் பெண்ணுமாக இரு யானைகள் வந்தன. அந்தக் களிறும் பிடியும் சிவமும் சக்தியுமாக அப்பருக்குக் காட்சி அளித்தன. ஆலயத்தை அடைவதற்குள் இவ்வாறு பல விலங்குகளையும் பறவைகளையும் ஆண் பெண் வடிவத்தில் அப்பர் பார்த்தார். கோழி பெடையோடு கூடிக் குலாவி வந்தது; ஆண் மயில் பெண் மயிலோடு ஆடிப் பிணைந்து வந்தது; அருகிலிருந்த சோலையில் ஆண் குயிலோடு பெண் குயில் பாடிக் களித்துக் கொண்டிருந்தது; இடி முழக்கக் குரலில் முழங்கிக் கொண்டு ஏனம் ஒன்று அதன் பெண் இனத்தோடு சென்றது; நாரையும் அதன் நற்றுணையும் சேர்ந்து பறந்து சென்றன; பைங்கிளியும் அதன் பேடையும் பசுமரக்கிளைகளில் மழலை பேசிக் கொண்டிருந்தன; காளையும் பசுவும் கம்பீரமாக அசைந்து நடந்து சென்றன. இவ்வாறு ஆணும் பெண்ணுமாக அப்பர் சுவாமிகளின் முன்னால் தோன்றியவையெல்லாம் சிவமும் சக்தியுமாக அவருடைய அகக்கண்ணுக்கு புலனாயின. உலகமெல்லாம் சக்தியும் சிவமுமாக விளங்குவதைக் கண்டார். "இந்த உலகமே கைலாசம்; தனியாக வேறு கைலாசமில்லை" என்று உணர்ந்தார். இத்தகைய மெய்ஞான உணர்ச்சியோடு மேலே சென்றபோது, ஐயாறப்பரும், அறம் வளர்த்த நாயகியும் கைலாச வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வருவதையும் பார்த்தார். தாம் அன்று புறக்கண்ணாலும் அகக்கண்ணாலும் பார்த்து அனுபவித்ததையெல்லாம் ஒவ்வொன்றாக இனிய தமிழில் இசைத்துப் பாடி அருளினார். இத்தனை காலமும் தாம் கண்ணால் கண்டும் கருத்தினால் அறியாமலிருந்தவற்றை இன்று திருவையாற்றில் கண்டு அறிந்து கொண்டதாக ஒவ்வொரு பாடலின் முடிவிலும் "கண்டறியாதன கண்டேன்!" என்று திரும்பத் திரும்ப வியந்து கூறினார்."

பாடல் எண் : ௧

மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது
காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டே
ன்.

பொழிப்புரை :


விரும்பத்தக்க பிறையை முடிமாலையாகச் சூடிய பெருமானைப் பார்வதியோடும் இணைத்துப் பாடியவர்களாய் அருச்சிக்கும் பூவும் அபிடேக நீரும் தலையில் தாங்கித் திருக்கோயிலை நோக்கிப் பெருமானைத் துதித்த வண்ணம் புகும் அடியவர் பின் சென்ற அடியேன் . கயிலை மலைக்குச் சென்றபோது ஏற்பட்ட உறுப்பழிவின் சுவடு ஏதும் தோன்றாதவகையில் தீங்கு நீங்கிய யாக்கை கொண்டு , கயிலை மலையிலிருந்து கால்சுவடு படாமல் திருவையாற்றை அடைகின்ற பொழுதில் , விருப்பத்திற்கு உரிய இளைய பெண்யானையோடு ஆண்யானை சேர்ந்து இரண்டுமாக வருவனவற்றைக் கண்டு , அவற்றை அடியேன் சத்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் , சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதனவற்றைக் கண்டவனாயினேன் .


பாடல் எண் : ௨

போழிளங் கண்ணியி னானைப் பூந்துகி லாளொடும் பாடி
வாழியம் போற்றியென் றேத்தி வட்டமிட் டாடா வருவேன்
ஆழி வலவனின் றேத்தும் ஐயா றடைகின்ற போது
கோழி பெடையொடுங் கூடிக் குளிர்ந்து வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.

பொழிப்புரை :


சந்திரனுடைய பிளப்பாகிய பிறையை முடிமாலையாகச் சூடிய பெருமானை , பூ வேலைகள் செய்யப்பட்ட மெல்லிய ஆடையை அணிந்த பார்வதியோடு இணைத்துப்பாடி , ` அவர்கள் திருவடி வாழ்க ` எனவும் , ` அவர்களுக்கு அடியேனுடைய வணக்கம் ` எனவும் சுழன்று ஆடிக்கொண்டு வரும் அடியேன் சக்கரப்படையை வலக்கையில் ஏந்தியுள்ள திருமால் நிலையாகப் புகழும் ஐயாற்றை அடையும்போது ஆண்கோழி பெண்கோழியுடன் கூட இரண்டுமாக மகிழ்வுடன் வருவனவற்றைக் கண்டேன் . அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன் .பாடல் எண் : ௩ 

எரிப்பிறைக் கண்ணியி னானை யேந்திழை யாளொடும் பாடி
முரித்த விலயங்க ளிட்டு முகமலர்ந் தாடா வருவேன்
அரித்தொழு கும்வெள் ளருவி ஐயா றடைகின்ற போது
வரிக்குயில் பேடையொ டாடி வைகி வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.

பொழிப்புரை :


நிலவினை உடைய பிறைக் கண்ணியனாகிய பெருமானைச் சிறந்த அணிகளை உடைய பார்வதியோடும் , இணைத்துப்பாடிக் கூத்துக்கு ஏற்ற தாளங்களை இட்டுக் கொண்டு முக மலர்ச்சியோடு ஆடிக்கொண்டு வரும் அடியேன் மணலை அரித்துக் கொண்டு வெள்ளிய அருவிபோல ஓடிவருகின்ற காவிரியின் வடகரைக்கண்ணதாகிய திருவையாற்றை அடையும் நேரத்தில் காதற் கீதங்களைப் பாடும் ஆண்குயில் பெண்குயிலோடு கலக்க . இரண்டும் ஓரிடத்தில் தங்கிப் பின் இணையாக வருவனவற்றைக் கண்டேன் . அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன் .பாடல் எண் : ௪

பிறையிளங் கண்ணியி னானைப் பெய்வளை யாளொடும் பாடித்
துறையிளம் பன்மலர் தூவித் தோளைக் குளிரத் தொழுவேன்
அறையிளம் பூங்குயி லாலும் ஐயா றடைகின்ற போது
சிறையிளம் பேடையொ டாடிச் சேவல் வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.

பொழிப்புரை :


பிறை சூடிய பெருமானைப் பார்வதியோடும் இணைத்துப்பாடி நீர்த்துறையை அடுத்துவளர்ந்த செடி கொடிகளின் பல மலர்களையும் அடியேன் தோள்கள் மகிழுமாறு அருச்சித்து நான் தொழுவேனாய்ப் பாடும் இளங் குயில்கள் ஒலிக்கும் ஐயாறு அடைகின்றபோது , இளைய பேடையோடு கலந்து வெண் சிறகுகளை உடைய சேவல் அன்னம் இணையாக வருவனவற்றைக் கண்டேன் . அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன் .பாடல் எண் : ௫

ஏடு மதிக்கண்ணி யானை யேந்திழை யாளொடும் பாடிக்
காடொடு நாடு மலையுங் கைதொழு தாடா வருவேன்
ஆட லமர்ந்துறை கின்ற ஐயா றடைகின்ற போது
பேடை மயிலொடுங் கூடிப் பிணைந்து வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.

பொழிப்புரை :


இளைத்த பிறையைச் சூடிய பெருமானைப் பார்வதியோடும் இணைத்துப் பாடிக் காடுகளையும் நாடுகளையும் மலைகளையும் கையால் தொழுதுகொண்டு ஆடி மகிழ்ந்து வரும் அடியேன் எம்பெருமான் கூத்தாடுதலை விரும்பித் தங்கியிருக்கும் ஐயாற்றை அடையும்போது ஆண் மயில் பெடைமயிலொடும் கலக்க இரண்டும் இணையாய் ஒன்றொடொன்று கூடி வருவனவற்றைக் கண்டேன் . அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன் .பாடல் எண் : ௬

தண்மதிக் கண்ணியி னானைத் தையனல் லாளொடும் பாடி
உண்மெலி சிந்தைய னாகி யுணரா வுருகா வருவேன்
அண்ண லமர்ந்துறை கின்ற ஐயா றடைகின்ற போது
வண்ணப் பகன்றிலொ டாடி வைகி வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.


பொழிப்புரை :


குளிர்ந்த பிறை சூடிய பெருமானைப் பார்வதியோடும் இணைத்துப் பாடி உள்ளம் குழைந்த திருவடி நினைவினேன் ஆகி உணர்ந்து உருகி வரும் அடியேன் தலைமையை உடைய எம்பெருமான் உகந்தருளியிருக்கின்ற ஐயாற்றை அடையும்போது நல்ல நிறமுடைய ஆண் பகன்றில் பெண் பகன்றிலோடு இணைந்து இரண்டுமாய் வருவனவற்றைக் கண்டேன் . அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன் .பாடல் எண் : ௭

கடிமதிக் கண்ணியி னானைக் காரிகை யாளொடும் பாடி
வடிவொடு வண்ண மிரண்டும் வாய்வேண் டுவசொல்லி வாழ்வேன்
அடியிணை ஆர்க்குங் கழலான் ஐயா றடைகின்ற போது
இடிகுர லன்னதொ ரேன மிசைந்து வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.

பொழிப்புரை :


விரும்பும் பிறை சூடிய பெருமானை மெல்லியலாள் ஆகிய பார்வதியோடும் இணைத்துப்பாடி , வைகறையில் துயில் எழுந்து எம்பெருமானுக்கு உகப்புடையனவாகப் பெறப்படும் மலர்களைக் கொய்துவரும் அடியேன் , சிறந்த அணிகலன்களையும் பொன்னையும் மணியையும் கரையில் சேர்க்கும் காவிரியின் வடகரையில் அமைந்த ஐயாற்றை அடையும்போது , பெரிய ஆண்மான் தன் பெடையோடு இணைய இரண்டுமாக இணைந்து வருவனவற்றைக் கண்டேன் . அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன் .

பாடல் எண் : ௮

விரும்பு மதிக்கண்ணி யானை மெல்லிய லாளொடும் பாடிப்
பெரும்புலர் காலை யெழுந்து பெறுமலர் கொய்யா வருவேன்
அருங்கலம் பொன்மணி யுந்தும் ஐயா றடைகின்ற போது
கருங்கலை பேடையொ டாடிக் கலந்து வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.

பொழிப்புரை :


விளக்கம் பொருந்திய பிறை சூடிய பெருமானை மெல்லியலாள் ஆகிய பார்வதியோடும் இணைத்துப்பாடி , வைகறையில் துயிலெழுந்து எம்பெருமானுக்கு உகப்புடையனவாகப் பெறப்படும் மலர்களைக் கொய்துவரும் அடியேன் , சிறந்த அணிகலன்களையும் பொன்னையும் மணியையும் கரையில் சேர்க்கும் காவிரியின் வடகரையில் அமைந்த ஐயாற்றை அடையும்போது , பெரிய ஆண் மான் தன் பெடையோடு இணைய இரண்டுமாக இணைந்து வருவனவற்றைக் கண்டேன் . அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன் .

பாடல் எண் : ௯

முற்பிறைக் கண்ணியி னானை மொய்குழ லாளொடும் பாடிப்
பற்றிக் கயிறறுக் கில்லேன் பாடியும் ஆடா வருவேன்
அற்றருள் பெற்றுநின் றாரோ டையா றடைகின்ற போது
நற்றுணைப் பேடையொ டாடி நாரை வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.

பொழிப்புரை :


அமாவாசையை அடுத்து ஒருகலையினதாய் முற்பட்டுத்தோன்றும் பிறை சூடிய பெருமானைச் செறிந்த கூந்தலை உடைய பார்வதியோடும் இணைத்துப்பாடி , அவன் திருவடிகளைப் பற்றி உலகினோடு உள்ள பாசத்தைப் போக்கிக் கொள்ள முடியாத அடியேன் , பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் வந்து எம்பெருமானுக்கே அற்றுத் தீர்ந்து அவன் அருள் பெற்று நிலவும் அடியார்கள் உடன் ஐயாற்றை அடையும்போது , சிறந்த துணையாகிய பெடையோடு ஆண் நாரைகள் கூட இரண்டுமாக இணைந்து வருவனவற்றைக் கண்டேன் . அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன் .பாடல் எண் :  ௧௦0

திங்கள் மதிக்கண்ணி யானைத் தேமொழி யாளொடும் பாடி
எங்கருள் நல்குங்கொ லெந்தை யெனக்கினி யென்னா வருவேன்
அங்கிள மங்கைய ராடும் ஐயா றடைகின்ற போது
பைங்கிளி பேடையொ டாடிப் பறந்து வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.

பொழிப்புரை :


பிறை சூடிய பெருமானைத் தேன் போன்ற சொற்களை உடைய பார்வதியோடு இணைத்துப் பாடி எம்பெருமான் இப்பொழுது அடியேனுக்கு எங்கு அருள் செய்வானோ என்று திருத்தலங்களை வழிபட்டுவரும் அடியேன் இளமங்கையர்கள் கூத்து நிகழ்த்தும் ஐயாற்றை அடையும்போது பச்சைக் கிளி தன் பெடையோடு மகிழ , இரண்டுமாக இணைந்து பறந்து வருவனவற்றைக் கண்டேன் . அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன் .


பாடல் எண் : ௧௧

வளர்மதிக் கண்ணியி னானை வார்குழ லாளொடும் பாடிக்
களவு படாததொர் காலங் காண்பான் கடைக்கணிற் கின்றேன்
அளவு படாததொ ரன்போ டையா றடைகின்ற போது
இளமண நாகு தழுவி யேறு வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.

பொழிப்புரை :


வளர்தற்குரிய பிறை சூடிய பெருமானை நீண்ட கூந்தலை உடைய பார்வதியோடு இணைத்துப்பாடி , வீணாகக் கழிக்கப்படாத தொரு காலத்தைக் காணும் பொருட்டுக் கடைவாயிலின்கண் நிற்கும் அடியேன் , எல்லையற்ற அன்போடு ஐயாற்றை அடையும் பொழுது இளமையை உடையதாய்க் கலத்தலுக்கு ஏற்றதாய பசுவினை , ஏறு தழுவ , இரண்டுமாய் இணைந்து வருவனவற்றைக் கண்டேன் . அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன் .


நன்றி (பாடலும் பொழிப்புரையும்): http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=4&Song_idField=4003

விருப்பம் :)