Monday, March 25, 2013

உயிரின் துன்பங்களும் பிழைப்பும் : திருவாசகப் பகுதி

.திருவாசகம் : போற்றித் திருஅகவல்
மாணிக்க வாசகர்
ஓர் உயிர் எவ்வாறெல்லாம் துன்பம் உறுகின்றது என்றும் அவற்றினின்று பிழைத்து கடவுளை எவ்வாறு உணர்கின்றது என்றும் மாணிக்கவாசகர் விவரமாக விளக்குகின்றார்... 


பாடலின் பகுதி:

...............................வார்கடல் உலகினில் 10
யானை முதலா எறும்பீ றாய
ஊனமி லியோனியி னுள்வினை பிழைத்தும்
மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்
தீனமில் கிருமிச் செருவினிற் பிழைத்தும் 
ஒருமதித் தான்றியின் இருமையிற் பிழைத்தும் 15

இருமதி விளைவின் ஒருமையிற் பிழைத்தும்
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
ஈரிரு திங்களிற் பேரிருள் பிழைத்தும்
அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும் 
ஆறு திங்களின் நூறலர் பிழைத்தும் 20

ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்
எட்டுத் திங்களிற் கட்டமும் பிழைத்தும்
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
தக்க தசமதி தாயொடு தான்படுந் 
துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும் 25

ஆண்டுகள் தோறும் அடைந்தஅக் காலை
ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும்
காலை மலமொடு கடும்பகற் பசிநிசி
வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும் 
கருங்குழற் செவ்வாய் வெண்ணகைக் கார்மயில் 30

ஒருங்கிய சாயல் நெருங்கியுள் மதர்த்துக்
கச்சற நிமிர்ந்து கதிர்த்து முன்பணைத்
தெய்த்திடை வருந்த எழுந்து புடைபரந்
தீர்க்கிடை போகா இளமுலை மாதர்தங் 
கூர்த்த நயனக் கொள்ளையிற் பிழைத்தும் 35

பித்த வுலகர் பெருந்துறைப் பரப்பினுள்
மத்தக் களிறெனும் அவாவிடைப் பிழைத்தும்
கல்வி யென்னும் பல்கடற் பிழைத்தும்
செல்வ மென்னும் அல்லலிற் பிழைத்தும் 
நல்குர வென்னுந் தொல்விடம் பிழைத்தும் 40

புல்வரம் பாய பலதுறைப் பிழைத்துந்
தெய்வ மென்பதோர் சித்தமுண் டாகி
முனிவி லாததோர் பொருளது கருதலும்
...........................................

பொழிப்புரை:

........நெடிய கடலாற் சூழப்பட்ட உலகத்தில்,
யானை முதலாக, எறும்பு இறுதியாகிய குறைவில்லாத கருப்பைகளினின்றும் உள்ள நல்வினையால் தப்பியும், மனிதப் பிறப்பில் தாயின் வயிற்றில் அதனை அழித்தற்குச் செய்யும் குறை வில்லாத புழுக்களின் போருக்குத் தப்பியும்,

முதல் மாதத்தில் தான்றிக்காய் அளவுடைய கரு இரண்டாகப் பிளவுபடுவதனின்றும் தப்பியும், இரண்டாம் மாதத்தில் விளைக்கின்ற விளைவினால் உருக்கெடுவதினின்று தப்பியும் மூன்றாம் மாதத்தில் தாயின் மதநீர்ப் பெருக்குக்குத் தப்பியும், நான்காம் மாதத்தில் அம்மதநீர் நிறைவினால் உண்டாகும், பெரிய இருளுக்குத் தப்பியும், ஐந்தாம் மாதத்தில் உயிர் பெறாது இருத்தலினின்று தப்பியும், ஆறாம் மாதத்தில் கருப்பையில் தினவு மிகுதியால் உண்டாகிய துன்பத்தினின்றும் தப்பியும்,

ஏழாவது மாதத்தில் கருப்பை தாங்காமையால் பூமியில் காயாய் விழுவதனின்று தப்பியும், எட்டாவது மாதத்தில் வளர்ச்சி நெருக்கத்தினால் உண்டாகும் துன்பத்தினின்றும் தப்பியும், ஒன்பதாவது மாதத்தில் வெளிப்பட முயல்வதனால் வரும் துன்பத்தினின்று தப்பியும், குழவி வெளிப்படுதற்குத் தகுதியாகிய பத்தாவது மாதத்தில், தாய்படுகின்றதனோடு தான்படுகின்ற, கடல் போன்ற துயரத்தினின்று தப்பியும், பூமியிற் பிறந்த பின்பு,

வளர்ச்சியடையும் வருடங்கள் தோறும் தாய் தந்தையர் முதலியோர் நெருக்கியும், அழுத்தியும் செய்கின்ற எத்தனையோ பல துன்பங்களில் தப்பியும் காலைப் பொழுதில் மலத்தாலும், உச்சிப் பொழுதில் பசியாலும், இராப்பொழுதில் தூக்கத்தாலும், ஊர்ப்பயணங்களாலும் உண்டா கின்ற துன்பங்களினின்று தப்பியும்,

கரிய கூந்தலையும் சிவந்த வாயினையும், வெண்மையாகிய பற்களையும், கார்காலத்து மயில் போலப் பொருந்திய. சாயலையும், நெருக்கமாகி உள்ளே களிப்புக் கொண்டு, கச்சு அறும்படி நிமிர்ந்து ஒளி பெற்று முன்னே பருத்து, இடை இளைத்து வருந்தும்படி எழுந்து பக்கங்களில் பரவி ஈர்க்குக் குச்சியும் இடையே நுழையப் பெறாத இளங்கொங்கைகளையும் உடைய மாதருடைய கூர்மையாகிய கண்களின் கொள்ளைக்குத் தப்பியும்,

மயக்கம் கொண்ட உலகினரது பெரிய மத்தக்களிறு என்று சொல்லத் தக்க ஆசைக்குத் தப்பியும், கல்விஎன்கின்ற பலவாகிய கடலுக்குத் தப்பியும், செல்வமென்கின்ற துன்பத்தினின்று தப்பியும், வறுமை என்கின்ற பழமையாகிய விடத்தினின்று தப்பியும், சிறிய எல்லைகளையுடைய பல வகைப்பட்ட முயற்சிகளில் தப்பியும்,

தெய்வம் உண்டு என்பதாகிய ஒரு நினைப்பு உண்டாகி, வெறுப்பில்லாததாகிய ஒரு பொருளை நாடுதலும்......

தொடர்புடைய பதிவுகள்:

உயிரை மயக்கும் மாயைகளும் மெய்தரு வேதியனும் : திருவாசகப் பகுதி


நன்றி: http://thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=8&Song_idField=8104&padhi=25&button=செல்க

விருப்பம் :)