Sunday, December 4, 2011

பொன்னார் மேனியனே - சுந்தரர் தேவாரம் - திருமழபாடி


சுந்தரர் தேவாரம் - திருமழபாடிபாடல் எண் : 1

பொன்னார் மேனியனே புலித்
தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்
கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழ
பாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி
யாரை நினைக்கேனே.

பொழிப்புரை :

பொன்போலும் திருமேனியை உடையவனே , அரையின்கண் புலித்தோலை உடுத்து , மின்னல்போலும் சடையின் கண் , விளங்குகின்ற கொன்றை மாலையை அணிந்தவனே , தலைவனே , விலையுயர்ந்த இரத்தினம் போல்பவனே , திருமழபாடியுள் திகழும் மாணிக்கம் போல்பவனே , எனக்குத் தாய்போல்பவனே , இப்பொழுது உன்னையன்றி யான் வேறு யாரை நினைப்பேன் ?


பாடல் எண் : 2

கீளார் கோவணமுந் திரு
நீறுமெய் பூசியுன்றன்
தாளே வந்தடைந்தேன் தலை
வாஎனை ஏன்றுகொள்நீ
வாளார் கண்ணிபங்கா மழ
பாடியுள் மாணிக்கமே
கேளா நின்னையல்லால் இனி
யாரை நினைக்கேனே.

பொழிப்புரை :

கீளின்கண் பொருந்திய கோவணத்தையும் உடுத்து , திருநீற்றையும் திருமேனியிற் பூசினவனே , யாவர்க்கும் தலைவனே , வாள்போலும் கண்களையுடைய உமாதேவியை உடைய ஒரு பங்கினனே , திருமழபாடியில் திகழும் மாணிக்கம்போல்பவனே , அடியேன் , உனது திருவடியையே புகலிடமாக வந்து அடைந்தேன் ; இனி உன்னையல்லாது வேறு யாரை எனக்கு உறவாக நினைப்பேன் ? என்னை நீ ஏற்றுக்கொள் .


பாடல் எண் : 3

எம்மான் எம்மனையென் றனக்
கெட்டனைச் சார்வாகார்
இம்மா யப்பிறவி பிறந்
தேஇறந் தெய்த்தொழிந்தேன்
மைம்மாம் பூம்பொழில்சூழ் மழ
பாடியுள் மாணிக்கமே
அம்மான் நின்னையல்லால் இனி
யாரை நினைக்கேனே.

பொழிப்புரை :

மேகம் தவழும் அழகிய மாஞ்சோலை சூழ்ந்த திரு மழபாடியில் திகழும் மாணிக்கம் போல்பவனே , எங்கள் தலைவனே , ` என் தந்தை என் தாய் ` என்று இவர்கள் எனக்கு எள்ளளவும் துணையாக மாட்டார் ; அவர்களைத் துணையாக நினைத்துத்தான் இந்த நிலையில்லாத பிறவியை எடுத்துப் பின் பிறந்து இளைத்துப் போனேன் ; ஆதலின் , இப்பொழுது உன்னையல்லாது வேறு யாரை நினைப்பேன் ?


பாடல் எண் : 4

பண்டே நின்னடியேன் அடி
யாரடி யார்கட்கெல்லாம்
தொண்டே பூண்டொழிந்தேன் தொட
ராமைத் துரிசறுத்தேன்
வண்டார் பூம்பொழில்சூழ் மழ
பாடியுள் மாணிக்கமே
அண்டா நின்னையல்லால் இனி
யாரை நினைக்கேனே.

பொழிப்புரை :

வண்டுகள் ஆரவாரிக்கின்ற பூஞ்சோலைகள் சூழ்ந்த திருமழபாடியில் திகழும் மாணிக்கம்போல்பவனே , வானுலகில் வாழ்பவனே , உனக்கு அடியவனாகிய யான் அப்பொழுதே உன் அடியார் , அவர்க்கு அடியராயினார் ஆகிய எல்லார்க்கும் தொண்டு செய்தலை மேற்கொண்டுவிட்டேன் ; உன்னோடாயினும் , உன் அடியாரோடாயினும் தொடர்புகொள்ளாத குற்றம் என்பால் இல்லாதவாறு அதனைக் களைந்தொழித்தேன் ; ஆதலின் இனி , யான் உன்னை யன்றி வேறு யாரை நினைப்பேன் ?


பாடல் எண் : 5

கண்ணாய் ஏழுலகுங் கருத்
தாய அருத்தமுமாய்ப்
பண்ணார் இன்றமிழாய்ப் பர
மாய பரஞ்சுடரே
மண்ணார் பூம்பொழில்சூழ் மழ
பாடியுள் மாணிக்கமே
அண்ணா நின்னையல்லால் இனி
யாரை நினைக்கேனே.

பொழிப்புரை :

ஏழுலகங்களிலும் உள்ள எல்லா உயிர்கட்கும் அறிவாகியும் , அவை விரும்பப்படுகின்ற பொருள்களாகியும் , பண் அமைந்த இனிய தமிழ்ப்பாடலாகியும் , எல்லாப் பொருட்கும் மேலாயும் உள்ள மேலான ஒளியே , நிலம் நிறைந்த பூஞ்சோலைகள் சூழ்ந்த திருமழபாடியுள் திகழும் மாணிக்கம்போல்பவனே , தலைவனே , இப்பொழுது யான் உன்னைத் தவிர வேறு யாரை நினைப்பேன் ?


பாடல் எண் : 6

நாளார் வந்தணுகி நலி
யாமுனம் நின்றனக்கே
ஆளா வந்தடைந்தேன் அடி
யேனையும் ஏன்றுகொள்நீ
மாளா நாளருளும் மழ
பாடியுள் மாணிக்கமே
ஆளாய் நின்னையல்லால் இனி
யாரை நினைக்கேனே.

பொழிப்புரை :

அடியவர்கட்கு , முடிவில்லாத வாழ்நாளைக் கொடுக்கின்ற , திருமழபாடியில் திகழ்கின்ற மாணிக்கம் போல்பவனே , உனக்கு நான் ஆளாயினபின் , உன்னை யல்லது வேறு யாரை நினைப்பேன் ? எனக்கு இறுதிநாள் வந்து நெருங்கித் துன்புறுத்துவதற்கு முன்பே உனக்கு நான் ஆளாதற்பொருட்டு வந்து உன்னை அடைந்தேனாதலின் , அடியேனையும் உனக்கு உரியவனாக நீ ஏற்றுக் கொண்டருள் .


பாடல் எண் : 7

சந்தா ருங்குழையாய் சடை
மேற்பிறை தாங்கிநல்ல
வெந்தார் வெண்பொடியாய் விடை
யேறிய வித்தகனே
மைந்தார் சோலைகள்சூழ் மழ
பாடியுள் மாணிக்கமே
எந்தாய் நின்னையல்லால் இனி
யாரை நினைக்கேனே.

பொழிப்புரை :

பொருத்து வாய் உடைய குழையை அணிந்தவனே , சடையின்கண் பிறையைத் தாங்கியுள்ளவனே , வெந்து நிறைந்த நல்ல வெண்டிரு நீற்றை அணிந்தவனே , இடபத்தை ஏறும் ஊர்தியாகக் கொண்ட சதுரப்பாட்டினை உடையவனே , அழகு பொருந்திய சோலைகள் சூழ்ந்த திருமழபாடியுள் திகழும் மாணிக்கம்போல்பவனே , என் தந்தையே , நான் உன்னை யல்லாது வேறு யாரை நினைப்பேன் ?


பாடல் எண் : 8

வெய்ய விரிசுடரோன் மிகு தேவர்
கணங்களெல்லாம்
செய்ய மலர்களிட மிகு
செம்மையுள் நின்றவனே
மையார் பூம்பொழில்சூழ் மழ
பாடியுள் மாணிக்கமே
ஐயா நின்னையல்லால் இனி
யாரை நினைக்கேனே.

பொழிப்புரை :

வெப்பமான விரிகின்ற கதிர்களை யுடைய பகலவன் முதலாக மிகுந்த தேவர் கூட்டங்கள் எல்லாம் , நல்ல மலர்களை இட்டு வழிபட , அவர்கட்கு மிகவும் நேர் நின்று அருள் செய்கின்றவனே , இருள் நிறைந்த அழகிய சோலைகள் சூழ்ந்த திருமழபாடியுள் திகழ்கின்ற மாணிக்கம் போல்பவனே , என் தலைவனே , அடியேன் இப்பொழுது உன்னை யல்லாது வேறு யாரை நினைப்பேன் ?


பாடல் எண் : 9

நெறியே நின்மலனே நெடு
மாலயன் போற்றிசெய்யும்
குறியே நீர்மையனே கொடி
யேரிடை யாள்தலைவா
மறிசேர் அங்கையனே மழ
பாடியுள் மாணிக்கமே
அறிவே நின்னையல்லால் இனி
யாரை நினைக்கேனே.

பொழிப்புரை :

உயிர்களுக்கு நன்னெறியாய் நிற்பவனே , மலத்தாற் பற்றப்படாதவனே , நீண்ட திருமாலும் பிரமனும் ஏத்தெடுக்கும் தியானப் பொருளே , நற்பண்புடையவனே , கொடிபோலும் இடை யினையுடைய உமாதேவிக்குக் கணவனே , மான் கன்று பொருந்திய அகங்கையை யுடையவனே , திருமழபாடியுள் திகழும் மாணிக்கம் போல்பவனே , அறிவு வடிவானவனே , அடியேன் , இப்பொழுது உன்னை யல்லாது வேறு யாரை நினைப்பேன் ?


பாடல் எண் : 10

ஏரார் முப்புரமும் மெரி
யச்சிலை தொட்டவனை
வாரார் கொங்கையுடன் மழ
பாடியுள் மேயவனைச்
சீரார் நாவலர்கோன் ஆ
ரூரன் உரைத்ததமிழ்
பாரோர் ஏத்தவல்லார் பர
லோகத் திருப்பாரே.

பொழிப்புரை :

அழகு பொருந்திய மூன்று புரங்களும் எரிந்தொழியுமாறு வில்லை வளைத்தவனும் , கச்சால் கட்டப்பட்ட தனங்களை யுடையவளாகிய உமாதேவியுடன் திருமழபாடியுள் விரும்பி வீற்றிருப்பவனும் ஆகிய சிவபெருமானை , புகழ் நிறைந்த திருநாவலூரில் உள்ளார்க்குத் தலைவனாகிய நம்பியாரூரன் பாடிய இத்தமிழ்ப் பாடல்களைப் பாட வல்லவர்களாகிய மக்கள் , சிவலோகத்தில் இனிது வீற்றிருப்பார்கள் .


விருப்பம் :)