Thursday, September 30, 2010

விநாயகர் அகவல் (ஔவை)



விநாயகர் அகவல் 
(ஔவை)


வினாயகர் அகவல் தோன்றிய கதை:- 

சமய குரவர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் இப்பூவுலகிற்கு வந்த நோக்கம் முடிந்து கயிலாயத்திலிருந்து வந்த வெள்ளை யானையில் ஏறி கயிலாய் செல்லலானார். இதனையறிந்த சேரமான் பெருமாள் நாயனார் என்ற சுந்தரரின் உற்ற தோழர் தானும் சுந்தரருடன் கயிலை செல்ல விரும்பி தனது குதிரையில் ஏறி அதன் காதில் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதி சுந்தரரை பின்பற்றி அவருடன் கயிலாயம் செல்லலானார்.

 இவற்றையெல்லாம் தெரிந்து கொண்ட அவ்வையார் தானும் அவர்களுடன் கயிலாயம் செல்ல விரும்பினார். இதற்காக தான் செய்து கொண்டிருந்த வினாயகர் பூசையை அவசர அவசரமாக செய்யலானார். அப்பொழுது வினாயகர் பெருமான் நேரில் தோன்றி “ அவ்வையே ! நீ அவசரப்படாமல் எப்பொழுதும் போல் நிதானமாக உனது பூசைகளைச் செய். அவர்களிற்கு முன்னே உன்னை நான் கயிலாயத்திற்கு கொண்டு சென்று சேர்க்கிறன் ” என்று கூறினார். அவ்வையாரும் நிதானமாக பூசைகளைச் செய்து வினாயகர் அகவலையும் பாடினார். வினாயகரும் தான் கூறியபடி அவ்வையாரை தனது தும்பிக்கையினால் தூக்கி சுந்தரரிற்கும், சேரமானிற்கும் முன்பாக கயிலாயத்தில் சேர்ப்பித்தார்.


வினாயகர் அகவல் வினாயகப் பெருமானின் அழகையும் பெருமைகளையும் அற்புதமாக விளக்குவதுடன் யோக முறைகளில் ஒன்றான குண்டலிணி யோகம் பற்றியும் சிறப்பாக விளக்குகிறது.



வினாயகர் அகவல் பொழிப்புரை:-

சீதக்களபச் செந்தாமரைப் பூம் 
  பாதச் சிலம்பு பலஇசை பாட
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும் 

  வண்ண மருங்கில் வளர்ந்து அழகு எறிப்பப்
பேழை வயிறும் பெரும் பாரக் கோடும் 

  வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும் 

  நெஞ்சில் குடி கொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிறு புயமும் 

  மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்கு பொன்முடியும் 

  திரண்ட முப்புரி நூல் திகழொளி மார்பும்

குளிர்ச்சியும் நறுமணமும் உடைய செந்தாமரைப் பூவின் நிறத்தையுடைய பாதங்களில் அணிந்துள்ள சிலம்பு பலவிதமான இசை ஒலிகளை எழுப்ப, இடுப்பினிலே பொன்னாலான அரைஞாண் கயிறும், அழகிய வெண்பட்டு ஆடையும் அழகிற்கு மேலும் அழகேற்ற, பெரிய பேழை போன்ற வயிறும், பெரிய உறுதியான தந்தமும், யானை முகமும், நெற்றியில் ஒளிவீசும் குங்குமப் பொட்டும், ஐந்து கைகளும், அவற்றில் இரண்டில் அங்குசம், பாசம் ஆகிய ஆயுதங்களும், மிகப் பெரிய வாயும், நான்கு பருத்த புயங்களும், மூன்று கண்களும், மூன்று மதங்களின் கசிவினால் உண்டாண சுவடு போன்ற அடையாளங்களும், இரண்டு காதுகளும், ஒளிவீசுகின்ற பொன்கிரீடமும், மூன்று நூல்கள் சேர்த்து திரித்து செய்யப்பட்ட முப்புரி நூல் அலங்கரிக்கும் அழகிய ஒளிவீசுகின்ற மார்பும்

சொற்பதங் கடந்த துரிய மெய்ஞான 

  அற்புதம் நின்ற கற்பகக் களிறே
முப்பழம் நுகரும் மூசிக வாகன 

  இப்பொழுதென்னை ஆட்கொள்ள வேண்டித்
தாயாய் எனக்குத் தானெழுந்தருளி 

  மாயப்பிறவி மயக்கம் அறுத்தே
திருந்திய முதல் ஐந்தெழுத்தும் தெளிவாய்ப் 

  பொருந்தவே வந்தென் னுளந் தன்னில் புகுந்து
குருவடிவாகிக் குவலயந்தன்னில் 

  திருவடி வைத்து திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்து எனக்கு அருளி 

  கோடாயுதத்தால் கொடு வினை களைந்தே

சொற்களால் விபரிக்க முடியாத துரியம் எனப்படும் நிலையில் உண்மையான ஞானமானவனே, மா,பலா,வாழை ஆகிய மூன்று பழங்களையும் விரும்பி உண்பவரே, மூஞ்சூறினை வாகனமாக கொண்டவரே, இந்தக்கணமே என்னை ஏற்றுக்கொள்ள வேண்டி, தாயைப்போல் தானாக வந்து எனக்கு அருள் புரிபவரே, மாயமான இந்த பிறவிக்கு காரணமான அறியாமையை அறுத்து எறிபவரே, திருத்தமானதும் முதன்மையானதும் ஐந்து எழுத்துகளின் ஒலிகளின் சேர்க்கையினால் ஆனதுமான பஞசாட்சர மந்திரத்தின் பொருளை தெளிவாக விளங்க என்னுடைய உள்ளத்தில் புகுந்து, குரு வடிவெடுத்து மிக மேன்மையான தீட்சை முறையான திருவடி தீட்சை மூலம் இந்த பூமியில் உண்மையான நிலையான பொருள் எது என்று உணர்த்தி, துன்பமில்லாமல் என்றும் இன்பத்துடன் இருக்கும் வழியை மகிழ்ச்சியுடன் எனக்கு அருள் செய்து, கோடாயுதத்தால் என்னுடைய பாவ வினைகளை அகற்றி

உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில் 

  தெவிட்டா ஞானத் தெளிவையுங் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் 

  இன்புறு கருணையின் இனிது எனக்கருளிக்
கருவிகள் ஒடுங்கும் கருத்து அறிவித்து 

  இருவினை தன்னை அறுத்து இருள் கடிந்து
தலமொரு நான்கும் தந்தெனக்கு அருளி 

  மலமொரு மூன்றின மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால் 

  ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறு ஆதாரத்து அங்குச நிலையும் 

  பேறா நிறுத்தி பேச்சுரை அறுத்தே

வெளியாய் உபதேசிக்கக் கூடாத உபதேசத்தை எனது காதுகளில் உபதேசித்து, எவ்வளவு அனுபவித்தாலும் திகட்டாத ஞானத்தை தெளிவாய் எனக்கு காட்டி, தங்கள் இனிய கருணையினால் மெய், வாய், கண், மூக்கு செவி ஆகிய ஐந்து பொறிகளினால் ஆன செயல்களை அடக்குகின்ற வழியினை இனிதாக எனக்கு அருளி, மேலே சொன்ன ஐந்து பொறிகளும் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து, நல்வினை தீவினை என்ற இரண்டு வினைகளையும் நீக்கி அதனால் ஏற்பட்ட மாய இருளை நீக்கி, 1) சாலோகம் 2) சாமீபம் 3) சாரூபம் 4) சாயுச்சியம் என்ற நான்கு தலங்களையும் எனக்கு தந்து, 1) ஆணவம் 2) கன்மம் 3) மாயை என்ற மூன்று மலங்களினால் ஏற்படக்கூடிய மயக்கத்தை அறுத்து, உடலில் இருக்கும் ஒன்பது துவாரங்களையும், ஐந்து புலன்களையும் ஒரே மந்திரத்தால் அடைக்கும் வழியினைக் காட்டி, 1) மூலாதாரம் 2) சுவாதிட்டானம் 3) மணிபூரகம் 4) அநாகதம் 5) விசுத்தி 6) ஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்களில் நிலை நிறுத்தி அதன் பயனாக பேச்சில்லா மோன நிலையை அளித்து,

இடை பிங்கலையின் எழுத்தறிவித்து 

  கடையில் சுழுமுனை கபாலமும் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின் 

  நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்
குண்டலணி அதனிற் கூடிய அசபை 

  விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலாதாரத்தின் மூண்டெழு கனலை 

  காலால் எழுப்பும் கருத்தறிவித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் 

  குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக்கரத்தின் ஈரெட்டு நிலையும் 

  உடற் சக்கரத்தின் உறுப்பையும் காட்டி

இடகலை, பிங்கலை எனப்படும் இடது, வலது பக்க நாடிகளின் மூலம் உள்ளிழுக்கப்படும் காற்றானது நடு நாடியான சுழுமுனை வழியே கபாலத்தையடையும் மந்திர மார்க்கத்தைக் காட்டி, 1) அக்னி 2) சூரியன் 3) சந்திரன் ஆகிய மூன்று மண்டலங்களின் தூண் போன்ற சுழுமுனையின் மூலம் நான்றெழு பாம்பான குண்டலனி சக்தியை எழுப்பி, அதனில் ஒலிக்கும் பேசா மந்திரமான அசபை மந்திரத்தை வெளிப்படையாகச் சொல்லி, மூலாதாரத்தில் மூண்டு எழுக்கூடிய அக்னியை மூச்சுக்காற்றினால் எழுப்பும் முறையை தெரிவித்து, குண்டலினி சக்தி உச்சியிலுள்ள சகஸ்ரதள சக்கரத்தை அடையும் போது உருவாகும் அமிர்தத்தின் நிலையையும் சூரிய நாடி, சந்திர நாடி ஆகியவற்றின் இயக்கத்தையும், குணத்தையும் கூறி, இடையிலிருக்கும் சக்கரமான விசுத்தி சக்கரத்தின் பதினாறு இதழ்களின் நிலையையும், உடலில் உள்ள எல்லா சக்கரங்களினதும் அமைப்புகளையும் காட்டி,

சண்முக தூலமும் சதுர்முக சூக்குமமும் 

  எண்முகமாக இனிதெனக்கு அருளி
புரியட்ட காயம் புலப்பட எனக்கு 

  தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்தி
கருத்தினில் கபால வாயில் காட்டி 

  இருத்தி முத்தி இனிதெனக்கு அருளி
என்னை அறிவித்து எனக்கு அருள் செய்து 

  முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம் 

  தேக்கியே எந்தன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரண்டுக்கு ஒன்றிடம் என்ன 

  அருள் தரும் ஆனந்தத்து அழுத்தி யென் செவியில் 

உருவமான தூலமும் அருவமான சூட்சுமமும் எனக்கு எளிதில் புரியும்படி அருளி, மூலாதாரம் முதல் சகஸ்ரதளம் வரையிலான எட்டு நிலைகளையும் எனக்கு தெரிசனப்படுத்தி அதன் மூலம் உடலின் எட்டு தன்மைகளையும் புலப்படுத்தி கபால வாயிலை எனக்கு காட்டித் தந்து, சித்தி முத்திகளை இனிதாக எனக்க அருளி, நான் யார் என்பதை எனக்கு அறிவித்து, பூர்வ ஜென்ம கன்ம வினையை அகற்றி, சொல்லும் மனமும் இல்லாத பக்குவத்தை எனக்கு தந்து அதன் மூலம் எண்ணங்களை தெளிவாக்கி, இருளும் ஒளியும் இரண்டிற்கும் ஒன்றே அடிப்படையானது என்பதை உணர்த்தி, அருள் நிறைந்த ஆனந்தத்தை உன் காதுகளில் அழுத்தமாக கூறி
எல்லையில்லா ஆனந்தம் அளித்து 
  அல்லல் களைந்தே அருள் வழிகாட்டி
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச் 

  சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்கு அணுவாய் அப்பாலிற்கும் அப்பாலாய் 

  கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் 

  கூடும் மெய்த் தெண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை 

  நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத்
தத்துவ நிலையை தந்து எனை ஆண்ட 

  வித்தக வினாயக விரை கழல் சரணே! 

அளவில்லாத ஆனந்தத்தை தந்து, துன்பங்கள் எல்லாவற்றையும் அகற்றி, அருள் வழி எது எனக்காட்டி, சத்-சித் அதாவது உள்ளும், புறமும் சிவனைக் காட்டி, சிறியனவற்றிற்கெல்லாம் சிறியது பெரியனவற்றிற்கு எல்லாம் பெரியது எதுவோ அதை கணுமுற்றி நின்ற கரும்பு போல என் உள்ளேயே காட்டி, சிவவேடமும் திருநீறும் விளங்கும் நிலையிலுள்ள உள்ள உண்மையான தொண்டர்களுடன் என்னையும் சேர்த்து, அஞ்சக் கரத்தினுடைய உண்மையான பொருளை எனது நெஞ்சிலே அறிவித்து, உண்மை நிலையை எனக்குத் தந்து என்னை ஆட்கொண்ட ஞான வடிவான வினாயகப் பெருமானே மணம் கமழும் உமது பாதார விந்தங்கள் சரணம்.


நன்றி: http://www.aanmegam.com/Vinayagar%20Agaval.htm

2 comments:

  1. தெளிவான விளக்கம்.
    மேலும் பலவற்றிற்கு விளக்கங்களை திரட்டுக.
    நன்றி

    ReplyDelete

தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.. :)

விருப்பம் :)