Tuesday, March 1, 2011

திருப்பள்ளியெழுச்சி - மாணிக்கவாசகர்


திருப்பள்ளியெழுச்சி - திரோதான சுத்தி 
(திருப்பெருந்துறையில் மாணிக்கவாசகர் அருளியது -எண்சீர் கழி நெழிலடி ஆசிரியவிருத்தம் )





திருச்சிற்றம்பலம்

போற்றியென் வாழ்முத லாகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்
டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலரும்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறை உறை சிவபெருமானே
ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 368

அருணண்இந்திரன் திசை அணுகினன் இருள்போய்

அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின்
கருனையின் சூரியன் எழவெழ நயனக்
கடிமலர் மலரமற்று அண்ணலங் கண்ணாம்
திரள்நிரை அருள்பதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே
அலைகடலே பள்ளி யெழுந்தருளாயே. 369

கூவின பூங்குயில் கூவின கோழி

குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை ஒளியொளி உதயத்து
ஓருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்
தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 370

இன்னிசை வீணையார் யாழினர் ஒருபால்

இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் துவள்கையர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
என்னையும் ஆண்டுகொண்டின்னருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 371

பூதங்கள் தோறும்நின் றாய்எனின் அல்லால்

போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா
சிந்தனைக் கும்அரியாய் எங்கள் முன்வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 372

பப்பற விட்டிருந்து உணரும்நின் அடியார்

பந்தனை வந்தறுத் தார் அவர் பலரும்
மைப்பறு கண்ணியர் மானுடத் தியல்பின்
வணங்குகின்றார் அணங் கின்மண வாளா
செப்புறு கமலங்கண் மலரும்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 373

அது பழச்சுவையென அமுதென அறிதற்கு

அரிதென எளிதென அமரும் அறியார்
இது அவன் திருவுரு இவன் அவன் எனவே
எங்களை ஆண்டுகொணடு இங் கெழுந்தருளும்
மதுவளர் பொழில்திரு உத்தர கோச
மங்கையுள்ளாய்திருப் பெருந்துறை மன்னா
எதுஎமைப் பணிகொளு மாறது கேட்போம்
எம்பெருமான்பள்ளி யெழுந்தருளாயே. 374

முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்

மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்
பந்தணை விரலியும் நீயும்நின்னடியார்
பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே
செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்
திருப்பெருந் துறையறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டிவந் தாண்டாய்
ஆரமுதே பள்ளி யெழுந்தருள்யே. 375

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா

விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள்
மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே
வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம்
கண்ணகத் தேநின்று களிதரு தேனே
கடலமு தேகரும் பேவிரும் படியார்
எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய்
எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே. 376

புவனியில் போய்ப்பிற வாமையின் நாள்நாம்

போக்குகின் றோம்அவ மேஇந்தப்பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்நின் அவர்தம்மெய்க்கருணையும் நீயும்
அவணியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமு தேபள்ளி யெழுந்தருளாயே. 377

திருச்சிற்றம்பலம்


நன்றி: http://www.shaivam.org/tamil/thirumurai/thivacha_020.htm

1 comment:

  1. திருவடி தீக்ஷை(Self realization)
    இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
    சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.



    Please follow

    http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)

    (First 2 mins audio may not be clear... sorry for that)

    (PART-2) http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4

    http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (PART-3)




    Online Books
    http://www.vallalyaar.com/?p=409


    Contact guru :
    Shiva Selvaraj,
    Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
    17/49p, “Thanga Jothi “,
    Kalaignar kudi-iruppu – Madhavapuram,
    Kanyakumari – 629702.
    Cell : 92451 53454

    ReplyDelete

தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.. :)

விருப்பம் :)