Sunday, May 27, 2012

எனக்கு இனிய எம்மானை :அற்புதத் திருவந்தாதி : காரைக்கால் அம்மையார்



அற்புதத் திரு அந்தாதி : காரைக்கால் அம்மையார்
எனக்கு இனிய எம்மானை, ஈசனை யான் என்றும்
மனக்கினிய வைப்பாக வைத்தேன், எனக்கு அவனைக்
கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன்
உண்டே எனக்கரியது ஒன்று?

நூல்: அற்புதத் திரு அந்தாதி (#10)

பாடியவர்: காரைக்கால் அம்மையார்

என் உயிருக்கு இனிமை தருபவனை, என் தலைவனை, அந்தச் சிவபெருமானை நான் நிரந்தரமாக என்னுடைய உள்ளத்தில் பதித்துவைத்திருக்கிறேன், அதனால் என் மனம் இனிக்கிறது.

நான் அந்தச் சிவனை என்னுடைய தலைவனாக ஏற்றுக்கொண்டேன். அதனால் அளவற்ற மகிழ்ச்சியை அடைந்தேன். இனி என்னால் செய்யமுடியாத ஒரு விஷயம் இந்த உலகத்தில் இல்லை!

குறிப்பு:

* காரைக்கால் அம்மையாரின் கதை:
- படிக்க: http://www.thevaaram.org/thirumurai_1/nayanmar_view.php?nayan_idField=16
- திரைப்பட வடிவத்தில் பார்க்க: Karaikkal Ammaiyar

* ’புனிதவதி’ (அல்லது) ’காரைக்கால் அம்மையார்’ எழுதிய இந்தப் பாடலின் இரண்டாவது வரியில் வரும் ‘இனிய வைப்பாக வைத்தேன்’ என்ற பகுதி மிகவும் அழகானது. ‘வைப்பு’ என்கிற அருமையான தமிழ்ச்சொல் இப்போது தப்பர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிற ஒன்றாகவே மாறிவிட்டது. (Except ‘நிரந்தர வைப்பு நிதி’ = Fixed Deposit :)

* இந்தப் பாடலின் வெண்பா வடிவம்:
எனக்கினிய எம்மானை ஈசனையான் என்றும்
மனக்கினிய வைப்பாக வைத்தேன், எனக்கவனைக்
கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன்
உண்டே எனக்கரிய தொன்று

நன்றி:http://365paa.wordpress.com/2012/05/20/319

விருப்பம் :)