Thursday, April 25, 2013

சிவபரத்துவம் - 1





ஒருவரும் சிவனோடு நிகர்ப்பவர் இல்லை; 
மக்களுள்ளும் அவனொடு ஒப்பவராவார் இல்லை;
ஆதலின், இயல்பிலே உலகைக் கடந்து நின்று ஞான சூரியனாய் விளங்கும் கடவுள் அச்சிவ பெருமானே.

சிவபெருமானைத் தவிர இறவாதவர் பிறர் இல்லை;
அவனை உணராது செய்யும் செயல் சிறந்த தவமாதல் இல்லை; 
அவனது அருளின்றி மும்மூர்த்திகளால் யாதொரு செயலும் நடவாது. 
அவனது அருளின்றி முத்திக்கு வழி இல்லை.

பொன்போலும் மேனியையுடைய, யானைத் தோற் போர்வையாளனாகிய சிவபெருமானே! 
ஊழிகளுள் ஒன்றில் ஒருவர் மற்றிருவரையும், பிறிதொன்றில் மற்றொருவர் ஏனை இருவரையும் படைக்குமாற்றால் தம்முள், "முன்னோர், பின்னோர்" என்னும் வேறுபாடில்லாத மும்மூர்த்திகளுக்கும் என்றும் முன்னோன்; 

அத்தன்மை பிறருக்கு இன்மையால், தன்னை ஒப்பாகின்ற பொருள் பிறிதொன்றும் இல்லாத பெருந்தலைவன்; தன்னை, "அப்பா" என்று அழைப்பவர்க்கு அப்பனுமாய் இருக்கின்றான்; 
(உம்மையால்) "அம்மே" என்று அழைப்பவர்க்கு அம்மையாயும் இருக்கின்றான்.

நீண்ட சடையை உடையவனாகிய சிவபெருமான், 
தேறுங்கால் நெருப்பினும் வெம்மை உடையன்; 
அருளுங்கால் நீரினும் தண்மையுடையவன்; 
ஆயினும், அத்தகைய அவனது ஆற்றலின் தன்மையை அறியும் உலகர் இல்லை. 

உலகர்க்கு இவ்வாறு அறியப்படாத சேய்மைக்கண் உளனாகிய அவன், மெய்யன்பர்க்கு அவ்வாறின்றி நன்கறியப்படும் அணிமைக்கண் உள்ளவனாய்த் தாயினும் மிக்க தயவுடையனாவான்.

என்னால் வணங்கப்படுகின்ற எங்கள் சிவபெருமான், தனது பொற்சடை பொன்னால் செய்யப்பட்டனவே என்னும்படி பின்னலோடு விளங்குமாறு இருப்பவன். "நந்தி" என்னும் பெயர் உடையான். அவனால் வணங்கப்படுபவர் ஒருவரும் இல்லை.

எங்கள் சிவபெருமானது பெருமையை நோக்குமிடத்து அவனோடொத்த பெருங்கடவுள் சேய்மையிலும் இல்லை; 

அண்மையிலும் இல்லை என்பது புலப்படும். உழவும், உழவின் பயனும், அவற்றிற்கு முதலாயுள்ள மழையும், அம் மழையைத் தருகின்ற மேகமும் ஆகிய எல்லாம், "நந்தி" என்னும் பெயருடைய அவனேயன்றிப் பிறர் இல்லை.

சிவபெருமான் என்றும் ஒரு பெற்றியனாய் அழிவின்றி இருக்கவும், அளவற்ற தேவர்கள் அழிந்தனர் என்று புராணங்கள் முழங்கவும், மண்ணிலும், விண்ணிலும் உள்ள பலர் அப்பெருமானை, "இவனே முதல்வன்" எனத் துணியமாட்டாத வராகின்றனர்.

திருமால், பிரமன் முதலிய தேவர்களும் இன்னும் சிவபிரானது பெருமையை ஓர்ந்து தெளியவில்லை. ஆகவே, அண்டத்தின் அப்புறத்தும் உள்ள அவனது பரப்பை அளந்து கண்டவர் யார்? ஒருவரும் இல்லை. 
அவன் எவ்விடத்தையும் உள்அடக்கி அவை அனைத்தையும் கடந்து நிற்கின்றான்.

"சிவபெருமானது பெருநிலை (வியாபகம்) ஒருவராலும் அளத்தற்கரிது" என்பதற்கு, அயன், மால் இருவரும் அப்பெருமானது அடிமுடி தேடிக் காணமாட்டாது அல்லற்பட்ட வரலாறே போதிய சான்றாகும்.
பிரமனும், திருமாலும் ஓரோர் எல்லையளவில் பெருநிலை (வியாபகம்) உடையவராயினும், அனைவரினும் மேம்பட்ட பெருநிலையுடையவன் சிவபெருமான். 

அவன் அத்தகையனாய்ப் புறத்து நிற்பினும், எப்பொருளிலும் நிறைந்து அவற்றை அறிந்து நிற்கின்றான்.

அருளாகிய ஒளி உருவினனாயும், என்றும் குறைதல் இல்லாத அவ்வருள் காரணமாக அனைத்துயிர்க்கும் நடுவுநிலைமையனாயும், அழிவில்லாதவனாயும் உள்ள சிவ பெருமான், தானே உலகிற்கு முதலாகியும், முடிவாகியும், பல்வகை உடம்பிலும் காணப்படுகின்ற இன்ப துன்பங்களாகியும் பரந்து நிறைந்திருக்கின்றான்.
திருத்தி விளங்கிய, கொன்றை மாலையணிந்த குழல்போலும் சடையை உடைய, அழகு விளங்கும் மங்கையைப் பாதியில் உடைய சிவபெருமானை மும்மூர்த்திகளும், தேவர்களும் எதனை விரும்பிக் குற்றத்தையே குணமாகக் கொண்டாடி வணங்கு கின்றார்கள்?

"காயம், கத்தூரி" என்னும் இரண்டையும் கலந்து கொதிக்க வைத்தாலும் அவ்விடத்து வியப்புண்டாகுமாறு கத்தூரியின் மணம் காயத்தின் மணத்தை அடக்கி மேற்பட்டு விளங்கும்; அதுபோல, உலகத்தார் சிவபெருமானை ஏனைத் தேவர் பலரோடு ஒப்ப வைத்து எண்ணினாலும், சிவபெருமானது திருவருளுக்கு ஏனைத் தேவரது அருள் ஈடாகாது; 
சிவனருளே மேம்பட்டு விளங்கும்.

அளகை நகரில் உள்ள இயக்கர்க்குத் தலைவனாகிய குபேரனை அவன் செய்த மிக்க தவத்தைக் கண்டு அவனை அந்நகருக்குத் தலைவனாகச் செய்து, அந்த அளகை நகரத்தைச் சுட்டி, 
"இதுதான் உனது நகர்; 
இதனை நீ நன்கு புரந்து, 
செல்வத்தைப் பெருக்குவதாயின் ஏற்றுக்கொள்" என்று எங்கள் சிவபிரானே வழங்கினான்.

சந்திரனைத் தரித்துள்ளவனாகிய சிவபெருமான், இவ்வுலகத்தில் ஏலம் முதலியவற்றின் மணங் கமழ்கின்ற சோலையின் பெயராகிய "பொழில்" என்பதனையே தமக்கும் பெயராகக் கொண்ட ஏழு தீவுகளையும், இவ்வுலகிற்கு மேலே ஒன்றைவிட ஒன்று நூறு கோடி யோசனை விரிவுடையனவாகிய பல உலகங்களையும் தோற்று வித்தவன்; 
அவ்வளவையும் ஆக்கிக் காத்து அழிக்குமாற்றை அறிந்த பேரறிவுடையவன். அவன் தன்னை நோக்கிச் செய்யும் மெய்த்தவத்தைக் கண்டு அத்தவத்தையே தனக்கு இடமாக விரும்பி வீற்றிருக்கின்றான்.

உயிர்கட்கு இறப்பையும், பிறப்பையும் பண்டே அமைத்து வைத்த தலைவன் நிலைபெற்று நிற்கின்ற தவநெறியைக் கூறும் நூல்கள் யாவை என ஆராயின், அவை இடி போலவும், முரசு முதலிய பறைகள் போலவும் அனைவரும் அறிய முழங்கும்; 

அவனது திருவுருவம் மலைபோலவும், கடல் போலவும் நன்கு விளங்கித் தோன்றும்.

கண்ணிற்குப் புலப்படாது கருத்தினுள்ளே நிற்கின்ற கள்வனாகிய சிவன், யாவர் எதனை எண்ணினும் அதனை அறிவான் என்று உண்மை நூல்கள் கூறவும், உலகர் அவனை நினைத்து அவன் அருளைப் பெறுகின்றார்களில்லை. நினையாமலே ஒவ்வொருவரும் "சிவன் எங்களுக்கு அருள் பண்ணவில்லை" என்று நொந்து கொள்கின்றார்கள்.

உண்மையில் சிவன், பிறவற்றை நினையாது தன்னை நினைப்பவர் பக்கமே விரும்பி நிற்கின்றான்.
உலகீர், எல்லாம் வல்லவனாய், கடல் நீரை, "தீக்கடவுளாகிய வடவையிடத்து அடங்கிநிற்க" என மிகுந்து வாராமல் நிற்கச்செய்த அருளாணை உடையவனாகிய சிவபெருமானை, நுண்ணுணர்வின்றி, "இல்லை" எனக் கூறிப்பிணங்குதல் வேண்டா; 

அவன் அயன், மால் முதலிய கடவுளர்க்கு முதல்வனாய் நின்று, எப்பொழுதும் உயிர்கட்கு நலம் புரிந்து வருகின்றான்.

"நமது மனமே நம்மை நன்னெறியினின்று மாற்றி விட்டது" என்பதை உணர்ந்து, மயக்கம் பொருந்திய அம்மனத்தை மாற்றித் தெளிந்தவரது வழியிற்றான் சிவபெருமான் மறைவின்றி விளங்கி நிற்கின்றான். அதனால், உலகீர், அவனது திருவடி நிழலில் செல்வதற்குப் பன்முறை வணக்கம் கூறியும், பலவாற்றால் புகழ்ந்து பாடியும் அவனது திருவடிகளை என்றும் தெளிந்து நின்மின்கள்.

"இறைவனே! நீ முன்முன் தோன்றினால் உன்னைத் தழுவிக்கொள்ளுதற்கு நான் சிறிதும் நாணமாட்டேன்; எனக்கு உன்னையன்றி உறவாவார் யாருளர்! யான் காணும்படி வெளி நின்றருள்" என்று மாறுபாடின்றி இரக்கின்ற பண்புடைய அடியவர் உள்ளத்திலே சிவன் அறையப்பட்ட ஆணிபோல்பவனாய் வீற்றிருக்கின்றான்
சிவபெருமான் பிறப்பில்லாதவன்; சடை முடி உடையவன்; மிக்க அருளுடையவன்; ஒருகாலத்தும் அழிவில்லாத வன்; யாவர்க்கும் வேறுபாடின்றி நன்மையையே செய்து, அவரை என்றும் விட்டு நீங்காதவன். அதனால் அவனை வணங்குங்கள். வணங்கினால் என்றும் மறவாத தன்மையாகிய மெய்யுணர்வு தோன்றுவதாகும்.
யாவர்க்கும் இன்பம் அருளி, அவரை விடாது தொடர்ந்து நிற்கின்ற சிவனை வணங்குங்கள்; வணங்கினால் அவனது திருவடி ஞானம் உங்கட்குக் கிடைக்கும்.
"அந்தி வானம் என்று சொல்லத் தக்க நிறத்தை யுடைய தாமரை (செந்தாமரை) மலர்போலும் ஒளி பொருந்திய முகத்தை உடைய, அழிவில்லாத சிவபெருமானது திருவருள் நமக்கே உரியதாகும்" என்ற உறுதியுடன் அவனை நாள்தோறும் வணங்க உடன்படும் அவரது உள்ளத்துள்ளே அவன் குடிபுகுந்து நிற்கின்றான்.
மாயோனும் சிவபெருமானை வழிபட உடன்பட்டு நின்றதல்லது வழிபட்டுக் காணவில்லை. படைப்புக் கடவுளாகிய பிரமன் வழிபடுதற்கு உடன்படவேயில்லை. அவர்கட்குப் பின் இந்திரன் காண இயலாதவனாய் வாட்டமுற்று நின்றான். ஆகவே, சிவபெருமான் தன்னை வணங்கி நிற்பவர்க்கே செல்கதித் துணையாய் நிற்கின்றான்.
மேகம் போலும் நிறத்தையுடைய திருமால், பிரமன், மற்றைய தேவர் ஆகியோர்க்கும் இழிவான பிறவித் துன்பத்தை நீக்குகின்ற ஒப்பற்றவனும், யானையை உரித்த எங்கள் தலைவனும் ஆகிய சிவபெருமானைத் துதியுங்கள்; அதனால் அவனை அடைதலாகிய அப் பெரும்பேறும் கிடைக்கும்.
"வானத்தில் நின்று முழங்குகின்ற மேகம்போல இறைவன் மேலுலகத்தில் நின்று தன் அடியவரை "வருக" என்று அழைப்பான் என்று ஆன்றோர் கூறுதல் உண்மையாய் இருக்குமோ" என்று சிலர் ஐயுறுவர்.

"எங்கள் சிவபெருமான் தன்னைப் பிரிந்த கன்றைத் தாய்ப்பசு கதறி அழைப்பது போலத் தன் அடியவரைத் தன்பால் கூவி அழைப்பவனே; (இதில் ஐயமில்லை. அவனைப் பலர் துதித்து அவற்றிற்கு ஈடாகப் பல பயன்களைப் பெற்றனர். ஆயினும்,) நான் அவனைத் துதிப்பது ஞானத்தைப் பெறுதற்பொருட்டே.
மக்கள்முன் தோன்றி அருள்புரிதலால் மண்ணுலகத்தில் உள்ளவனைப் போலவும், தேவர்களுள் ஒருவனாய் நிற்றலால் வானுலகத்தில் உள்ளவனைப் போலவும், முத்தர்களுக்கு வீட்டுலகத்தில் நின்று அருள்புரிதலால் வீட்டுலகத்தில் உள்ளவன் போலவும், யாவரையும் தன்மயமாகச் செய்தலால் இரத குளிகை போல்பவன் போலவும் தோன்றுபவனாய், பண்களில் பொருந்திய இசையிடத்துள்ள விருப்பத்தால் தானே வீணையை இசைக்கின்ற சிவபிரான் பொருட்டு அவனது அருள் நோக்கில் நின்றே அவனிடத்து நான் அன்புசெய்கின்றேன்.
சிவபெருமான் தேவர் பலர்க்கும் தலைவன்; நமக்கும் தலைவன்; உலகமுழுதும் நிறைந்து நிற்கும் நிறைவினன்; அவ்வாறு நிற்பினும் அவற்றை அகப்படுத்து அப்பால் நிற்கும் பெரியோன்; ஆதலின் அவனது தன்மையை முற்றும் அறிந்து துதிப்பவர் ஒருவரும் இல்லை. ஆயினும் எங்கும் நிறைந்த அவனது அருட்டன்மைகளை உயிர்கள் தாம் தாம் அறிந்தவாற்றால் பாடித் துதித்தலும் அமைவுடையதே.
பண்டுதொட்டு இவ்வுலகத்தில் "கடவுள்" என்ற ஒன்று, பலவாகக் கொள்ளப்படுகின்றது. 

அவற்றின் கண் பலரும் பல விதிமுறை வழிபாடுகளைச் செய்தும் மெய்ம்மையைச் சிறிதும் உணர்கின்றார்களில்லை. அக்கடவுளரைத் துதிக்கின்ற பல தோத்திரப் பாடல்களைத் தாங்களே ஆக்க வல்லவர்களும் மெய்யறிவில்லாதவர் களாய் மனத்தில் துன்புறுகின்றார்கள்.

சந்தனத்தில் நின்று கமழ்கின்ற கத்தூரி மானின் மதமணம்போலச் சிவபெருமான், முத்தியுலகத்தில் உள்ள சிலர்க்கு அறிவுறுத்திய நெறியே மெய்ந்நெறி. அந்நெறி நின்றே பகலவனது பல கதிர்கள் போன்ற அவனது பல திருப்பெயர்களை, நான் நடக்கும் பொழுதும், இருக்கும்பொழுதும் துதித்துக் கிடக்கின்றேன்.

விருப்பம் :)